வீராணம் ஏரியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
வீராணம் ஏரியிலிருந்து விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறக்க கோரி வீராணம் ஏரியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளால் பரபரப்பு.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே அமைந்துள்ளது வீராணம் ஏரி இந்த ஏரியின் மூலம் நேரடி பாசனமாக 44,000 மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெற்று வரும் நிலையில் மறைமுகமாக ஒரு லட்சம் ஏக்கர் பாசனம் பெறுகிறது.
இந்த நிலையில் தற்போது புவனகிரி காட்டுமன்னார்கோவில் சிதம்பரம் தாலுகா பகுதிகளில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்வதற்காக நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நெல் பயிர்கள் அனைத்தும் முளைத்து தற்போது தண்ணீர் இல்லாமல் கருகும் நிலைக்கு பயிர்கள் தள்ளப்பட்டுள்ளது மேலும் தென்மேற்கு பருவமழை பெய்யாததால் நெல் பயிர்களுக்கு கட்டாயமாக தண்ணீர் வேண்டும் என்பதால் விவசாயிகள் நீர்வளத்துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து தண்ணீர் திறந்துவிட கோரிக்கை வைத்து வந்தனர் ஆனால் நீர்வளத்துறை அதிகாரிகள் சென்னை குடிநீருக்கு மட்டுமே தண்ணீர் அனுப்பும் பணியில் தீவிரம் காட்டி வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.
மேலும் 47.50 அடி கொண்ட வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 475 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் ஏரியின் நீர்மட்டம் தற்போது 43. 15 அடியாக நீர் இருக்கும் நிலையில் வீராணம் ஏரியில் உள்ள 34 பாசன வாய்க்கால் மதகு மூலம் சீரான தண்ணீர் திறக்க வேண்டுமென கோரிக்கை வைத்து வீராணம் ஏரியில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எனவே கருகி வரும் நெல் பயிர்களை காப்பாற்ற நீர்வளத்துறை அதிகாரிகளும் மாவட்ட ஆட்சியரும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது பாசன வாய்க்கால்களில் சீரான தண்ணீர் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளதாகவும் தண்ணீர் அவ்வப்போது திறந்து வருவதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.