யானத்தில் அர்னாப் புயல் கோரத்தாண்டவம்! விவசாயப் பயிர்கள், மின்கம்பங்கள், வீடுகள் சேதம்!
புதுச்சேரி யானம் பிராந்தியத்தில் அர்னாப் புயல் தாக்கத்தால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. விவசாயப் பயிர்கள், மின்கம்பங்கள், குடிசை வீடுகள் மற்றும் அரசு கட்டடங்கள் சேதமடைந்துள்ள நிலையில், சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கடந்த 27-ஆம் தேதி ஆந்திரக் கடலோரப் பகுதிகள் மற்றும் யானத்தைத் தாக்கிய அர்னாப் புயலின்போது, மணிக்கு 125 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதுடன், காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 150 கிலோமீட்டர் வரை அதிகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக, உயிரிழப்புகளோ கால்நடைகள் உயிரிழந்த சம்பவங்களோ பதிவாகவில்லை.
புயல் சேத விவரம்
யானம் பகுதியில் சுமார் 101 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் முழுமையாகச் சேதமடைந்துள்ளன. 20-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் முறிந்து விழுந்துள்ளன. கால்நடை வளர்ப்புத் துறையின் கீழ், சுமார் 25 கால்நடைக் கொட்டகைகள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ சேதமடைந்துள்ளன.
மின்சாரத் துறையைப் பொறுத்தவரை, 35-க்கும் மேற்பட்ட உயர் அழுத்த மின்கம்பங்களும், 25 குறைந்த அழுத்த மின்கம்பங்களும் சாய்ந்துள்ளன. மேலும், இரண்டு மின்மாற்றிகள் மற்றும் சுமார் 15 கிலோமீட்டர் தூரத்திற்கான மின்கடத்திகள் சேதமடைந்துள்ளன. இதனால் யானம் பகுதியில் மின்விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
வருவாய்த் துறையின் கணக்கெடுப்பின்படி, சுமார் 60 குடிசை வீடுகள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ இடிந்து சேதமடைந்துள்ளன.
மேலும், 500-க்கும் மேற்பட்ட பெரிய மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. அரசு கட்டடங்களின் சுற்றுச்சுவர்கள் உள்ளிட்ட பகுதிகளும் சேதமடைந்துள்ளன. பல படகுகளும் சேதமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பலத்த மழையால் சாலைப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. மொபைல் தொடர்பு சேவைகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இணைய இணைப்பும் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சாலைகளில் விழுந்த மரங்கள் மற்றும் மின்கம்பங்களை அகற்றும் பணியில் தீயணைப்புத் துறையினர், தேசியப் பேரிடர் மீட்புப் படையினர், பொதுப்பணித் துறையினர் மற்றும் மின்சாரத் துறையினர் இணைந்து தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
யானம் பிராந்திய நிர்வாகி சிவராஜ் மீனா, புதுச்சேரி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள முதற்கட்ட சேத மதிப்பீட்டு அறிக்கையில் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

