in

ஹரியானாவில் பாஜக அரசு பெரும்பான்மை இழந்தது


Watch – YouTube Click

ஹரியானாவில் பாஜக அரசு பெரும்பான்மை இழந்தது

ஹரியானாவில் நயாப் சிங் சைனி தலைமையிலான பாஜக அரசுக்கு அளித்துவந்த ஆதரவை 3 சுயேட்சைகள் வாபஸ் பெற்றுள்ளனர். இதனால், பாஜக அரசு பெரும்பான்மையை இழந்துள்ளதால், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தி உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

90 உறுப்பினர்களைக் கொண்ட ஹரியானா சட்டப்பேரவைக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற தேர்தலில், 40 இடங்களை பாஜக பிடித்தது. 10 எம்எல்ஏக்களைக் கொண்டுள்ள துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சி, ஒரு எம்எல்ஏ-வைக் கொண்ட ஹரியானா லோக்கித் கட்சி மற்றும் 6 சுயேச்சைகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக மனோகர் லால் கட்டார் பதவியேற்றார்.

இந்நிலையில், மக்களவைத் தேர்தலுக்கான பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து, பாஜகவுக்கு அளித்துவந்த ஆதரவை துஷ்யந்த் சவுதாலா கட்சி வாபஸ் பெற்றது. 6 சுயேட்சைகள் மற்றும் ஹரியானா லோக்கித் கட்சியின் ஆதரவுடன் ஆட்சியை பாஜக தக்கவைத்தது. எனினும், மனோகர் லால் கட்டாருக்குப் பதிலாக, புதிய முதலமைச்சராக நயாப் சிங் சைனி பதவியேற்றார்.

இந்நிலையில், பாஜக அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக 3 சுயேச்சை எம்எல்ஏ-க்கள் அறிவித்துள்ளனர். ரோத்தக் நகரில் காங்கிரஸ் முன்னாள் முதலமைச்சர் பூபிந்தர் சிங் ஹூடா, மாநில காங்கிரஸ் தலைவர் உதய் பானுடன் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சுயேச்சை எம்எல்ஏ-க்களான சோம்பிர் சங்வான், ரன்தீர் கோலன், தரம்பால் ஆகியோர், விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.

மேலும், காங்கிரஸ் கட்சிக்கு தங்களது ஆதரவை தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டனர். முன்னதாக, எம்எல்ஏ பதவியிலிருந்து மனோகர்லால் கட்டாரும், பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதற்காக ஒரு சுயேச்சை எம்எல்ஏ-வும் விலகினர். இதனால், தற்போதைய நிலையில், 88 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் பாஜக 40 இடங்களைப் பெற்றுள்ளது. சுயேச்சைகள் 2 பேர், ஹரியானா லோகித் கட்சியின் ஒரு எம்எல்ஏ ஆகியோரின் ஆதரவுடன் பாஜக-வின் பலம் 43-ஆக உள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு 30 எம்எல்ஏ-க்கள் உள்ளனர். இந்திய தேசிய லோக்தளம் கட்சியின ஒரு எம்எல்ஏ, சுயேச்சைகள் 4 பேர் ஆதரவுடன் காங்கிரஸின் பலம் 35-ஆக உள்ளது. பெரும்பான்மை பலத்தை பாஜக இழந்துள்ளதால், முதலமைச்சர் பதவியிலிருந்து நயாப் சிங் சைனி உடனடியாக விலக வேண்டும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தி, உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேநேரம், அரசியல் நிகழ்வுகள் குறித்து கருத்து தெரிவித்த ஜனநாயக ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் சவுதாலா, பாஜக அரசு பதவிவிலக வேண்டும் என்று வலியுறுத்தினார். புதிதாக ஆட்சியமைப்பதற்கு தங்களுடன் பூபிந்தர் சிங் ஹூடா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ஜனநாயக ஜனதா கட்சி ஆதரவு அளிக்கும்பட்சத்தில், காங்கிரஸ் கூட்டணியின் பலம், பெரும்பான்மைக்கு தேவையான 45-ஐ பெறும். இதனால், ஹரியானாவில் பாஜக ஆட்சி விலகி, காங்கிரஸ் கூட்டணி அரசு அமையுமா அல்லது உடனடியாக தேர்தல் நடத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Watch – YouTube Click

What do you think?

நாகை மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் பரவலாக லேசான மழை

உயிரினங்களையும் விட்டு வைக்காத கோடை வெப்பம்