அத்துமீறலா ? வடவள்ளி அவுட்-போஸ்ட் பெயர்ப் பலகையை மறைத்து த.வெ.க. பேனர்
தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளின் அலட்சியத்தால் சர்ச்சை – நெட்டிசன்கள் மத்தியில் எகிறும் விவாதம் !!!
கோவை, வடவள்ளி பகுதியில் காவல் துறைக்குச் சொந்தமான புறக்காவல் நிலையத்தின் (Police Outpost) அதிகாரப்பூர்வ பெயர்ப் பலகையை முற்றிலும் மறைத்து, தமிழக வெற்றிக் கழகத்தினர் பிரம்மாண்ட பேனர் வைத்து உள்ள சம்பவம் கோவையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரசியல் கட்சியினர் பொது இடங்களில் அஜாக்கிரதையாகவும், விதிமுறைகளை மீறியும் பேனர்கள் வைப்பதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வரும் நிலையில், த.வெ.க.வினர் ஒரு படி மேலே போய் நேரடியாகப் பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவல் நிலையப் பதாகையையே மறைத்து இந்த ‘கட்-அவுட்’ அரசியல் சாகசத்தை அரங்கேற்றி உள்ளனர்.
வடவள்ளியின் பேருந்து நிலையத்தில் அமைந்து உள்ள அந்தப் புறக்காவல் நிலையத்தின் ‘போர்டு’ எங்கு இருக்கிறது என்றே தெரியாத அளவுக்கு, கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்களின் படங்கள் அடங்கிய பிரம்மாண்ட பேனர் அதன் மீது அப்படியே ‘அட்டாச்’ செய்யப்பட்டு உள்ளது.
காவல் துறையின் பதாகையை மறைத்து வைக்கப்பட்ட இந்த அத்துமீறல் காட்சிகளை, அந்தப் பகுதியைக் கடந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சிலர் தங்களது செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் தட்டிவிட்டு உள்ளனர்.
இந்த வீடியோக்கள் தற்போது பேஸ்புக் உள்ளிட்ட தளங்களில் காட்டுத்தீயாய் பரவி, நெட்டிசன்கள் மத்தியில் பெரும் கண்டனக் குரல்களை எழுப்பி, வைரலாகி வருகிறது.
சட்டத்தையும், ஒழுங்கையும் நிலைநாட்டும் ஒரு துறையின் அடையாளத்தையே, ஒரு புதிய அரசியல் கட்சி இப்படி அலட்சியமாக மறைக்கலாமா ? எனப் பொதுமக்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


