“SAY YES TO LIFE, NO TO DRUGS” என மனித சங்கிலி
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!
வானில் இருந்து ட்ரோன் பார்வை – “SAY YES TO LIFE, NO TO DRUGS” என மனித சங்கிலி
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற “போதையில்லா தமிழ்நாடு” பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, நாகப்பட்டினம் இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் கலந்து கொண்டு, சுமார் 3,000 கல்லூரி மாணவ, மாணவிகளுடன் இணைந்து போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டார்.
போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், மாணவர்களிடையே போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது

இதன் ஒரு பகுதியாக கல்லூரி மைதானத்தில் மாணவ, மாணவிகள் மனித சங்கிலியாக அணிவகுத்து, “SAY YES TO LIFE, NO TO DRUGS” என்ற வாசகத்தை உருவாக்கினர். இந்த பிரம்மாண்ட மனித சங்கிலி ட்ரோன் கேமரா மூலம் வானில் இருந்து பதிவு செய்யப்பட்ட காட்சிகள் பார்ப்போரை வெகுவாக கவர்ந்தன.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேழ்கர் சுப்பிரமண்ய பாலசந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் போதைப்பொருள் பயன்பாடு அல்லது புழக்கம் குறித்து தெரியவந்தால், உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும், போதைப்பொருள் புழக்கம் குறித்து தகவல் அளிக்கும் நபர்களின் விவரங்கள் முழுமையாக ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
போதைப்பொருள் தொடர்பான புகார்களை கட்டணமில்லா தொலைபேசி எண் 10581 மூலம் தெரிவிக்கலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.


