கதறி அழுத சுகாதார செவிலியர் ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டு
சாதிப் பாகுபாடு மற்றும் மன உளைச்சலை பெண் உயர் அதிகாரி ஏற்படுத்துகிறார் – கதறி அழுத சுகாதார செவிலியர் ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டு
காஞ்சிபுரம் மாவட்டம் எழுச்சூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலை துணை சுகாதார நிலையத்தில், கிராம சுகாதார செவிலியராக கே.ஜோதி என்பவர் கடந்த 12 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். அங்கு புதிதாகப் பொறுப்பேற்ற சமூக சுகாதார செவிலியர் ஜெயலட்சுமி என்பவர் சாதிய பாகுபாடு மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்தி வருவதாக ஒரு பகீர் குற்றச்சாட்டை கே.ஜோதி எழுப்பி உள்ளார்.
கே.ஜோதி அளித்த மனுவில், அதிக மக்கள் தொகை கொண்ட மௌலிவாக்கம் பகுதியில், 5 சுகாதார செவிலியர்கள் (VHN) செய்ய வேண்டிய பணிகளைத் தனி நபராக, கடந்த 12 ஆண்டுகளாக எவ்வித ரிமார்க்கும் இல்லாமல் செய்து வருகிறேன்.
இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பொறுப்பேற்ற ‘ஜெயலட்சுமி’ என்ற சமூக சுகாதார செவிலியர், தன்னை சாதிப் பெயரை அடிப்படையாக வைத்துப் பேசுவதாகவும், சேலை கட்டுவது மற்றும் பேசும் விதம் குறித்தும் அவதூறாகப் பேசி மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பணி உயர்வும், பதவி உயர்வுக்கான (SHN) வாய்ப்புகளையும் பெறக்கூடாது என்ற நோக்கில், பொய்யான காரணங்களைக் ஜெயலட்சுமி கூறி 3 முறை தனக்கு மெமோ வழங்கியிருப்பதாகவும் வேதனையுடன் புலம்பினார்.
இதேபோன்று ஜெயலட்சுமி யின் அடக்குமுறையால், அத்துறையில் பணிபுரியும் 3 ஊழியர்கள் மன உளைச்சல் தாங்காமல் தற்கொலைக்கு முயன்றதாகவும், தனக்கு வாய் பேச முடியாத இரண்டு குழந்தைகள் இருப்பதால்தான் நான் இந்தக் மன அழுத்தங்களை பொறுத்துக்கொண்டு பணிபுரிவதாகவும் கண்ணீருடன் தெரிவித்தார்.
மருத்துவத் துறை அதிகாரிகள் விரைவாக தலையிட்டு, நேர்மையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; எங்களது உயிரையும் வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற வேண்டும்” எனப் பாதிக்கப்பட்ட செவிலியர் கே.ஜோதி கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.

