அரசு தலைமை மருத்துவமனை அமைக்கக் கோரி கவன ஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம்
நாகப்பட்டினத்தில் அரசு தலைமை மருத்துவமனையை மீண்டும் அமைக்கக் கோரி கவன ஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம்
நாகப்பட்டினம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை மீண்டும் அதே இடத்தில் அமைத்திட வலியுறுத்தி, நாகை மாவட்ட வளர்ச்சி குழுமம் சார்பில் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள அவுரித்திடலில் இன்று ஒரு நாள் கவன ஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஜி.கே. நிஜாமுதீன் தலைமையில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் வழக்கறிஞர்கள், வர்த்தகர்கள், பேருந்து நிலைய வியாபாரிகள், ஹோட்டல் உரிமையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும், பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
நாகையில் கடந்த 110 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வந்த அரசு தலைமை மருத்துவமனை, நாகை மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்ட பின் நகர எல்லையிலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள ஒரத்தூருக்கு மாற்றப்பட்டது. பின்னர் அரசு விதிகளைக் காரணம் காட்டி அது வேதாரண்யத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

தலைமை மருத்துவமனை மாற்றப்பட்டதால் நாகை நகரில் பிரசவம், விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகள் முழுமையாக இல்லாமல் போயுள்ளன. இதன் காரணமாக நாகப்பட்டினம், நாகூர், திருமருகல், திட்டச்சேரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏழை எளிய மக்கள், கர்ப்பிணிப் பெண்கள், விபத்தில் சிக்குவோர் அவசர சிகிச்சைக்காக 10 கி.மீ தொலைவு அலைந்து திரிய வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக இரவு நேரங்களில் சிகிச்சையின்றி கடுமையான பாதிப்புகள் ஏற்படுவதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, வேதாரண்யத்திற்கு மாற்றப்பட்ட மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை மீண்டும் நாகை நகரிலேயே அதே இடத்தில் விரைந்து அமைத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் ஒருமித்த குரலில் வலியுறுத்தினர்.


