செப்டம்பர் 1 முதல் செல்போன் கொண்டு செல்வதற்கான முழுமையான தடை
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உள்ளிட்ட தமிழகத்தின் 52 முதுநிலைக் கோயில்களில் இன்று (செப்டம்பர் 1) முதல் செல்போன் கொண்டு செல்வதற்கான முழுமையான தடை அமலுக்கு வந்துள்ளது.
பழனியில் விஐபிக்கள் உட்பட எவரும் செல்போன் கொண்டு செல்ல அனுமதி இல்லை எனவும், தடையை மீறி செல்ஃபி, ரீல்ஸ் எடுப்பவர்கள் மீது காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உட்பட தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களுக்குள் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த ஏற்கனவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
இருப்பினும், விதிகளை மீறி சிலர் கோயிலுக்குள் செல்போனில் புகைப்படம், வீடியோ மற்றும் செல்ஃபி எடுப்பது, ரீல்ஸ் தயாரிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.ஏற்கனவே உயர்நீதிமன்ற உத்தரவின்படி பழனி மலைக்கோயிலுக்கு செல்போன் எடுத்துச் செல்ல தடை அமலில் உள்ள நிலையில், தற்போது அறநிலையத்துறையின் புதிய சுற்றறிக்கையின்படி, விஐபிக்கள் (VIP) உட்பட எவராயினும் மலைக்கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்வதற்கான முழுமையான தடை இன்று (செப்.1) முதல் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.

பழனி முருகன் கோயில் மற்றும் அறுபடை வீடுகள் உட்பட மதுரை மீனாட்சி அம்மன், ஸ்ரீரங்கம் அரங்கநாதர், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி, சமயபுரம் மாரியம்மன், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் உள்ளிட்ட தமிழகத்தின் 52 முதுநிலைக் கோயில்களில் இக்கட்டுப்பாடு இன்று முதல் முழு வீச்சில் நடைமுறைக்கு வந்துள்ளது.
பழனி மலைக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக அடிவாரம் மற்றும் முக்கியப் பகுதிகளில் பிரத்யேக ‘செல்போன் பாதுகாப்பகங்கள்’ அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் தங்களது செல்போன்களைப் பாதுகாப்பாக வைத்துச் செல்ல ரூ.5 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறி மறைமுகமாக கோயிலுக்குள் செல்போன்களை எடுத்துச் சென்று படம் பிடிப்பவர்கள் மற்றும் ரீல்ஸ் எடுப்பவர்கள் மீது உடனடியாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், இதனை முறையாகக் கண்காணிக்கத் தவறும் கோயில் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் மீதும் துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை பாயும் என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

