பண்ருட்டியில் கல்லூரி மாணவர் மர்ம மரணம் – கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை
உடனடியாக குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் வாக்குவாதம் – பண்ருட்டியில் பரபரப்பு
பண்ருட்டி: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கல்லூரி மாணவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பண்ருட்டி அருகே சீரங்குப்பம் பகுதியைச் சேர்ந்த வீரப்பன் என்பவரின் மகன் விஜயரங்கன் (20). இவர் கடலூர் பெரியார் அரசு கல்லூரியில் பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு படித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று இரவு உணவு அருந்திவிட்டு சென்ற விஜயரங்கன், இன்று காலை வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மர்மமான முறையில் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்து, சம்பவம் குறித்து சந்தேகம் எழுப்பியதுடன், உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு பண்ருட்டி டி.எஸ்.பி. ரகுபதி தலைமையிலான போலீசார் விரைந்து வந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே, மாணவரின் உயிரிழப்பு தொடர்பாக அவரது குடும்பத்தினர் புகார் மனு அளித்தனர்.
புகார் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்ததைத் தொடர்ந்து, உயிரிழந்த மாணவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கிடையே, பண்ருட்டி அரசு மருத்துவமனை நுழைவு வாயிலில் மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுத காட்சி அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
மாணவரின் மரணம் தொடர்பாக போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேதப் பரிசோதனை மற்றும் போலீஸ் விசாரணையின் முடிவிலேயே உயிரிழப்புக்கான காரணம் குறித்து முழுமையான தகவல் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சம்பவத்தால் பண்ருட்டி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


