புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை
அமித்ஷா வருகை; புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கோரி, பொதுநல அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக உள்ளது. புதுவை சட்டசபையில் மாநில அந்தஸ்து கேட்டு 14 முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநில அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்தி டெல்லியில் சுயேச்சை எம்எல்ஏ நேரு தலைமையில் பொதுநல அமைப்புகள் போராட்டம் நடத்தின.
மத்திய அமைச்சர் அமித்ஷா புதுவை வருவதையொட்டி, அவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அண்ணா சிலை அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு நேரு எம்எல்ஏ தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு பொதுநல அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி பெறாததால் போலீசார் எம்எல்ஏவை தவிர்த்து மற்றவர்களை அங்கிருந்து கைது செய்து வேனில் ஏற்றி அழைத்து சென்றனர்.

