ஓசூர், ஸ்ரீ வேல்முருகன் கோவில் ஆடி கிருத்திகை
ஓசூர், ஸ்ரீ வேல்முருகன் கோவிலில் ஆடிகிருத்திகை திருநாள் விமரிசை ராஜ அலங்காரத்தில் காட்சி தந்த முருக பெருமானை வழிபட்ட பக்தர்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வேல்முருகன் திருக்கோயிலில் இன்று ஆடி கிருத்திகை திருநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் உட்பட அனைத்து திருக்கோயில்களிலும் இன்று ஆடிகிருத்திகை திருநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, ஸ்ரீ வேல்முருகன் திருக்கோவில் ஆடிக்கிருத்திகை திருநாள் உற்சவம் நேற்று பரணி பூஜையுடன் துவங்கி நடைபெற்றது. இதில், மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
ஆடி கிருத்திகை திருநாளான இன்று அதிகாலை மூலவர் ஸ்ரீ வேல்முருகனுக்கு பால், தயிர், நெய், வெண்ணை, பன்னீர், திருநீறு, சந்தனம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு பூஜை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

பின்னர், மலர்களுடன் சந்தன காப்பு அலங்காரத்திலும் எம்பெருமான் முருகன் ராஜ அலங்காரத்தில் திருக்காட்சி அளித்தார்.
தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதனை ஒட்டி ஏராளமான பக்தர்கள் முருகப்பெருமானை தரிசித்து வழிபட்டனர்.
இதில், ஓசூர் மட்டுமின்றி கர்நாடகா ஆந்திரா ஆகிய அண்டை மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகப்பெருமானை பக்தி பரவசத்துடன் தரிசித்து வழிபட்டனர்.


