in

பலத்த காற்று எச்சரிக்கை – ராமேஸ்வரத்தில் மீன் பிடிக்க தடை

பலத்த காற்று எச்சரிக்கை காரணமாக ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் மீன்பிடிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன், தொண்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.

வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையின்படி, வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகம் வரை பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், ராமேஸ்வரம், மண்டபம், தொண்டி உள்ளிட்ட மீன்பிடித் துறைமுகங்களில் இருந்து கடலுக்குச் செல்லும் விசைப்படகுகளுக்கு இன்று மீன்பிடி அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை. நாட்டுப்படகு மீனவர்களுக்கும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ராமேஸ்வரம், பாம்பன் மற்றும் மண்டபம் மீன்பிடித் துறைமுகங்களில் விசைப்படகுகள் மற்றும் ஏராளமான நாட்டுப்படகுகள் கரையிலேயே நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன. வழக்கமாக அதிகாலை முதலே பரபரப்பாக இயங்கும் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகம் இன்று வெறிச்சோடி காணப்பட்டது.

தொடர்ச்சியாக கடலுக்குச் செல்ல முடியாததால், மீனவர்களின் அன்றாட வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மீன்பிடித் தொழிலை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றன. மீன் ஏலம், மீன் வியாபாரம், ஐஸ் ஆலைகள், வலை பழுதுபார்ப்பு உள்ளிட்ட துணைத் தொழில்களும் பாதிப்பை சந்தித்துள்ளன.

இந்த மீன்பிடித் தடையால் நேரடியாகவும் மறைமுகமாகவும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை சீராகி, மீன்வளத்துறையின் அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், பாதுகாப்பு வழிகாட்டுதல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

What do you think?

புதுச்சேரி – ஏனாமில் ₹15,000-க்கு ஏலம் போன புலசா மீன்!