புதுச்சேரியில் பெண் கொலை
பீரோ உடைக்கப்படவில்லை …அணிந்திருந்த நகை மட்டும் திருட்டு…
கருவடிக்குப்பம் கெங்கையம்மன் கோயில் வீதி அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் மணி (48). அவரது மனைவி ரமணி (42). கணவன் மனைவி இருவரும் வீடு அருகே ஒரு டிபன் கடை நடத்தி வருகின்றனர்.
வழக்கமாக கடையில் காலையில் வேலை முடிந்ததும் மனைவி வீடு திரும்புவார். அதே போன்று வியாழக்கிழமையும் அவர் வீடு திரும்பியுள்ளார். கணவர் பிற்பகல் வீடு திரும்புவார். இந்நிலையில் வியாழக்கிழமை பிற்பகல் கணவர் வீடு திரும்பியதும் வீடு பூட்டிக் கிடந்தது.
ஓரிடத்தில் வீட்டின் சாவியை வைத்துவிட்டுச் செல்வார்கள். அங்கே இருந்த சாவியை எடுத்து திறந்து கணவர் வீட்டுக்குள் சென்றார். வீடு அலங்கோலமாக இருந்தது. சமையல் அறையிலும் மனைவி இல்லை. அந்த அறையையொட்டிய ஒரு பகுதியில் கழுத்து, தலையில் கத்திரிக்கோலால் குத்தப்பட்டு மனைவி ரமணி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அருகே அந்த கத்திரிக்கோலும் கிடந்தது. மேலும், அவர் அணிந்திருந்த 6 பவுன் நகை காணவில்லை. ஆனால் பீரோ உடைக்கப்படாமல் அதிலிருந்த நகைகள் அப்படியே இருந்துள்ளன.
இக் கொலை சம்பவம் தொடர்பாக லாஸ்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


