பழனி கோவில் ₹100 கோடி நிலம் முறைகேடு: 4 பேர் மீது FIR
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள 100 கோடி ரூபாய் மதிப்புள்ள திருமடத்து நிலத்தை முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்த புகாரில், சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையின் (FIR) முழுமையான விபரங்கள் தற்பொழுது வெளியாகியுள்ளன.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான 1 ஏக்கர் 40 சென்ட் நிலம் முறைகேடாகக் கிரயம் செய்யப்பட்ட விவகாரத்தில், பழனி கோயில் நிலங்கள் பிரிவு கண்காணிப்பாளர் முருகானந்தம் அளித்த முறைப்படியான புகாரின் பேரில் பழனி அடிவாரம் போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த போலி டிரஸ்ட் நிர்வாகி முருகதாஸ், உடுமலை பாப்பன்குளத்தைச் சேர்ந்த வெள்ளத்துரை, பழனி டி.கே.என் புதூரைச் சேர்ந்த சேதுபதி மற்றும் பழனி இணை சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் ஆகிய 4 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டு அவர்கள் மீது FIR போடப்பட்டுள்ளது.
அவர்கள் மீது போலி ஆவணங்களை உருவாக்குதல் (பிரிவு 336(3)), போலியாக உருவாக்கப்பட்ட ஆவணங்களை உண்மை என நம்பவைத்து பயன்படுத்துதல் (பிரிவு 340(2)), ஏமாற்றுதல் மற்றும் சொத்துக்களை முறைகேடாக அபகரித்தல் (பிரிவு 318(4)), குற்றத்திற்கு உடந்தையாக இருத்தல் (பிரிவு 49) மற்றும் கூட்டுச் சதி (பிரிவு 61(2)) ஆகிய 5 கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுகளின்படி, இந்த மடத்தின் சொத்துக்கள் பழனி கோயில் இணை ஆணையரின் நேரடி நிர்வாகத்தின் கீழ் உள்ளது. வருவாய்த்துறை ஆவணங்களிலும் ‘அருள்மிகு தண்டபாணி சுவாமி மடம்’ என்ற பெயரிலேயே பட்டா உள்ள நிலையில், தற்பொழுது முருக பக்தர்களின் இலவச வாகன நிறுத்தமாகப் பயன்படுத்தப்படும் இந்த நிலம் தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் உள்ளது.

மேலும், எவ்வித வில்லங்கமும் செய்யக்கூடாது என கடந்த 2-ம் தேதியே திருமடத் தக்கார் சார்பில் சார்பதிவாளருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்தது.
இந்த அனைத்து நீதிமன்ற உத்தரவுகளையும், கோயில் நிர்வாகத்தின் முன்அறிவிப்புக் கடிதத்தையும் முற்றிலும் புறக்கணித்துவிட்டு, இந்த நிலத்திற்கு எவ்வித பாத்தியதையும் இல்லாத டிரஸ்ட் பிரமுகர் முருகதாஸ் என்பவர் மூலம், கடந்த 6-ம் தேதியன்று வெள்ளத்துரை மற்றும் சேதுபதி ஆகிய இருவருக்கு, சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து மோசடியாகப் பதிவு செய்து கொடுத்துள்ளார் என்பது முதல் தகவல் அறிக்கையின் மூலம் அம்பலமாகியுள்ளது.


