செஞ்சி அடுத்த சிங்கவரம் ஸ்ரீ அரங்கநாதர் சுவாமி கோவில் பத்து நாள் பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள சிங்கவரம் கிராமத்தில் மலை மீது
அமைந்துள்ளது ஸ்ரீ ரங்கநாதர் ஆலயம்.இது பல்லவர் கால குடவரை கோவிலாகவும்,செஞ்சிக்கோட்டையை ஆண்ட ராஜா தேசிங்கு மன்னன் வணங்கிய திருக்கோவிலாக விளங்கி வரும். இக்கோவிலில் பத்து நாள் பிரம்மோற்சவ விழா ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
இந்த வருடம் பிரமோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து உற்சவர் மண்டபத்தில் வைத்து உற்சவர் ஸ்ரீ ரங்கநாயகி சமேத ஸ்ரீ அரங்கநாதருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு பூக்களால் தங்க ஆபரண நகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு புரோகிதர்கள் மந்திரங்கள் முழங்க மகா தீப ஆராதனையுடன் கொடியேற்றம் நடைபெற்றது.தொடர்ந்து தினமும் காலை இரவு சிறப்பு நிகழ்ச்சிகளும், 11-ம் தேதி சிம்ம வாகனத்திலும், 12-ம் தேதி அனுமந்த வாகனத்திலும் 13-ம் தேதி சேஷ வாகனத்திலும், சாமி திருவீதி உலா நடைபெற இருக்கிறது.
விழாவின் முக்கிய திருவிழாவாக 14-ம் தேதி கருட சேவை உற்சவம், 16-ம் தேதி திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
திருவிழாவை முன்னிட்டு தினமும் அன்னதானம் நடைபெறுகிறது.
திருவிழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் உபயதாரர்கள் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


