in

400 ஏக்கர் ஏரியைத் தூர்வார முயற்சி எடுத்த கிராம மக்கள்: ஆதரவுக் கரம் நீட்டிய தன்னார்வலர்கள்!

400 ஏக்கர் ஏரியைத் தூர்வார முயற்சி எடுத்த கிராம மக்கள்: ஆதரவுக் கரம் நீட்டிய தன்னார்வலர்கள்!

 

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே குறிச்சி கிராமத்தில் உள்ள 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியைத் தூர்வாரும் பணி, கிராம மக்களின் முயற்சியால் தற்போது நனவாகத் தொடங்கியுள்ளது.

நீர் ஆதாரத்தை மீட்டெடுக்கப் போராடிய கிராம மக்கள் பட்டுக்கோட்டை அருகே உள்ள குறிச்சி கிராமத்தில், 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரியநாயகிஅம்மன் ஏரி அமைந்துள்ளது.

கல்லணைக் கால்வாய் மூலம் நீர் பெறும் இந்த ஏரி, குறிச்சி மட்டுமின்றி பாலத்தளி, பண்ணவயல், பில்லிங்குழி உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களின் ஏரி, குளங்களுக்கும், விவசாயப் பாசனத்திற்குமான முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.

 

நாளடைவில் இந்த ஏரியில் நாணல்களும், சீமைக் கருவேல மரங்களும் மண்டிப் போனதால், அதன் நீர்ச் சேமிப்புத் திறன் வெகுவாகக் குறைந்தது. இதனால் கவலையடைந்த கிராம மக்கள், ஏரியைத் தூர்வார முடிவு செய்து பல்வேறு முயற்சிகள் மூலம் நிதியும் திரட்டினர்.

ஆனால், ஏரியின் பரப்பளவு மிகப்பொரிதாக இருந்ததாலும், போதிய நிதி இல்லாததாலும், அரசு அனுமதி பெறுவதில் நீடித்த சிக்கல்களாலும் பணியைத் துவங்க முடியாமல் தவித்து வந்தனர்.

இந்நிலையில், கிராம மக்கள் ஒன்றிணைந்து பேராவூரணியைச் சேர்ந்த நீர்நிலை மீட்பாளரும், ‘மெகா பவுண்டேஷன்’ நிறுவனருமான நிமல் ராகவனை அணுகினர். அவரது முயற்சியால், ஸ்ரீதர் வேம்புவின் ‘ஜோஹோ’ (Zoho) நிறுவனம் மற்றும் ‘பேர்ட்ஸ்கேல்’ (Birdscale) நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த ஏரியைத் தூர்வாரும் பணிக்கு நிதியுதவி அளிக்க முன்வந்தன.

இதனைத் தொடர்ந்து, குறிச்சி கிராம மக்கள் முன்னிலையில் ஏரி தூர்வாரும் பணி முறைப்படி துவங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மெகா பவுண்டேஷன் நிமல் ராகவன், ஜோஹோ நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதி (CSR) பொறுப்பாளர் சிபி ஆனந்த், பட்டுக்கோட்டை வட்டாட்சியர் (தாசில்தார்) யுவராஜ், பேர்ட்ஸ்கேல் நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவின் ஒரு பகுதியாகக் கிராம மக்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.

“எங்கள் ஊர் ஏரி சுமார் 400 ஏக்கர் பரப்பளவு கொண்டது. பல ஆண்டுகளாக இதனைத் தூர்வாரத் திட்டமிட்டும் போதிய நிதி இல்லாததால் பணிகள் தொய்வடைந்தன. நாங்கள் சொந்தமாக நிதி திரட்டி களமிறங்கியபோது, தன்னார்வலர்களும் தனியார் நிறுவனங்களும் வாரி வழங்கி ஆதரவளித்துள்ளனர்.

இப்போதைக்கு 6 பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு 2 மாதங்களுக்குள் பணிகளை முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். இப்பணி முழுமையடைந்தால் எங்கள் ஊர் மட்டுமின்றி, சுற்றுவட்டாரத்தில் உள்ள 5 கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டம் உயரும்” என கிராம மக்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் குறிச்சி பெரியநாயகிஅம்மன் ஏரி முழு கொள்ளவு 383.13 ஏக்கரில், தற்போது, 93.08 கோடி லிட்டர் தண்ணீர் மட்டுமே சேமிக்கப்பட்டு வருகிறது.

ஏரியை முழுமையாக துார்வாரினால், 542.68 லிட்டர் அளவு தண்ணீரை சேமிக்க முடியும் எனவும், இதேபோல ஆவணம் ஏரி 122.18 ஏக்கரில், தற்போது 54.09 கோடி லிட்டர் அளவு சேமிப்பு அளவை துார்வாரிய பிறகு 173.06 கோடி லிட்டரும், காயாவூர் ஏரி 114.41 ஏக்கரில், 20.94 கோடி லிட்டர் அளவு சேமிப்பு அளவை, துார்வாரிய பிறகு 162.06 கோடி லிட்டர் வரை சேமிக்க முடியும் என ஏ.ஐ., டெக்னாலாஜி மூலம் கணக்கீடு செய்யப்பட்டுள்ளன.

What do you think?

தஞ்சாவூர் காணக் கிடைக்காத 27 பெருமாள் கருடசேவை

திருவாடானை அரசு மருத்துவமனையில் குடிநீர் இன்றி நோயாளிகள் அவதி