படப்பை அருகே குடியிருப்பு பகுதியில் சட்டவிரோத பாருடன் இயங்கும் டாஸ்மாக் கடையை அகற்ற கோரி கலெக்டரிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே ஆத்தணஞ்சேரி சுபஷ்ரீ நகரில் குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை எண் 4096-ஐ அகற்றக் கோரி, அப்பகுதி பெண்கள் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் சினேகாவை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில், டாஸ்மாக் கடைக்கு முறையான பார் அனுமதி இல்லாத நிலையிலும், தகரக் கொட்டகையில் சட்டவிரோதமாக பார் அமைத்து செயல்பட்டு வருவதாகவும், இதனால் அப்பகுதியில் மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள் சிதறிக் கிடப்பதுடன், போதையில் உள்ளவர்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அப்பகுதியைக் கடந்து செல்வதில் சிரமம் ஏற்படுவதாகவும், சாலையோரத்தில் போதையில் இருப்பவர்கள் சிறுநீர் கழிப்பது உள்ளிட்ட அருவருப்பான சம்பவங்கள் தொடர்ந்து.
நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில் அந்த பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஒருவருக்கு கால் உடைந்து பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை அவர் பெற்று வருவதாகவும்,இது போல் மதுபானக் கடையால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மனுவைப் பெற்ற மாவட்ட ஆட்சியர் சினேகா, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், குடியிருப்பு பகுதியில் சட்டவிரோத பாருடன் செயல்படும் டாஸ்மாக் கடையை மாவட்ட நிர்வாகம் உடனடியாக அகற்றாவிட்டால், கிராம மக்கள் ஒன்றிணைந்து மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என அப்பகுதி பெண்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


