in

வல்லக்கோட்டை முருகன் கோயில் ஆடி கிருத்திகை

வல்லக்கோட்டை முருகன் கோயில் ஆடி கிருத்திகை

 

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை முன்னிட்டு திரளான பக்தர்கள் வழிபாடு…………….

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் புகழ்பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இது அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற தலமாகும்.

பழமையான இத்திருக்கோயிலில் கிருத்திகை, சஷ்டி நாளிலும் செவ்வாய், வெள்ளி கிழமைகளிலும் வந்து வழிபடுவோருக்கு புதிய வீடு, திருமணம், பதவி உயர்வு கிடைப்பதாக ஐதீகம்.

புராணகாலத்தில் சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகள் கிளம்பி சரவணப்பொய்கை எனும் தடாகத்தில் உள்ள தாமரை மலர்களில் விழுந்து ஆறு குழந்தைகளாக அவதரித்தன. இந்த குழந்தைகளைப் பார்வதி தேவி ஒன்றாக்கினார். இவ்வாறு முருகப்பெருமான் அவதாரம் நிகழ்ந்ததாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன.

இங்கு ஆண்டுதோறும் ஆடி கிருத்திகை உற்சவம் விமரிசையாக நடைபெறும். அந்த வகையில் வியாழனன்று ஆடிகிருத்திகையினை முன்னிட்டு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர் முதலிய ஊர்களிலிருந்து காவடி எடுத்து வந்து பக்தர்கள் வழிபட்டனர்.

இந்த ஆண்டு ஆடி பரணியும், ஆடி கிருத்திகையும் குருவாரத்தில் வந்தமையால் பக்தர்கள் கூட்டம் பெருமளவில் இருந்தது.

ஆடி பரணியினை முன்னிட்டு புதனன்று இரவு மூலவர் முருகப்பெருமானுக்குச் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பரணி அபிஷேக அடியார்கள் 51 குடம் பால் எடுத்து வந்து விமரிசையாக பாலாபிஷேகம் நடைபெற்றது.

வியாழனன்று அதிகாலை 3 மணிக்கு திருக்கோயில் நடை திறக்கப்பட்டு கோ பூசைக்குப் பிறகு மூலவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு 11 விதமான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. சந்தனகாப்பு அலங்காரத்தில் அவர் அருள்பாலித்தார்.

உற்சவர் முருகப்பெருமானுக்கு அதிகாலை 4 மணிக்கு அபிஷேகம் நடைபெற்றது. சுவாமிமலையில் சிவபெருமானுக்கு உபதேசித்த பிரணவ உபதேச அலங்காரத்தில் உற்சவர் முருகப்பெருமான் காட்சியளித்தார்.

ஆடி கிருத்திகையினை முன்னிட்டு சுமார் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடி எடுத்து வந்தும் அலகு குத்தி வந்தும் பிரார்த்தனைகளை முடித்தனர்.

பக்தர்கள் எளிதாக சுவாமி தரிசனம் செய்திட ஏதுவாக திருக்கோயில் நிர்வாகத்தினரால் நிழற்பந்தலுடன் கியூ வரிசை அமைக்கப்பட்டிருந்தது.

மேலும் பக்தர்களின் வசதிக்காக திருக்கோயில் வளாகத்தில் இலவச மருத்துவ முகாமும் அமைக்கப்பட்டு இருந்தது.

திருக்கோயில் நிர்வாகத்தின் மூலம் அன்னதானம் நீர்மோர் ஆகியவைகளும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.

திருப்பெரும்புதூர் காவல் துணை கண்காணிப்பாளர் கீர்த்திவாசன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பல ஊர்களைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்களும் சிறப்பு பணிக்கு வந்திருந்தனர்.

ஆடி கிருத்திகை உற்சவ ஏற்பாடுகளை மண்டல இணை ஆணையர் திரு.சி.குமரதுரை அவர்களின் அறிவுரைப்படி, திருக்கோயில் நிர்வாக அதிகாரி சோ.செந்தில்குமார் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

What do you think?

முசரவாக்கம் ஆடி மாத திருவிழா அம்மன் வீதி உலா

முதல் விமானப் பயணம் – மகிழ்ச்சியில் மாணவர்கள்!