விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தேங்காய் எண்ணெய் கொள்முதல் கோரி முழக்கம்
கும்பகோணம்: தேங்காய் எண்ணெய் கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் முழக்கம்
கும்பகோணத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் தேங்காய்களை கையில் ஏந்தி தேங்காய் எண்ணெய் கொள்முதல் செய்ய வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் திருமலை தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தின் தொடக்கத்தில் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மாவட்டச் செயலாளர் விமலநாதன் தலைமையில் விவசாயிகள் திரண்டு வந்து தேங்காய்களை கையில் ஏந்தி கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது, “தேர்தல் நேரத்தில் தமிழ்நாடு அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக அங்கன்வாடிகளில் தேங்காய் எண்ணெய் விநியோகிக்க விவசாயிகளிடமிருந்து தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் வெளிநாடுகளில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்வதை தடை செய்ய வேண்டும். கடந்த மாதங்களில் 30 ரூபாய்க்கு விற்ற தேங்காய் தற்போது 9 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
எனவே வெளிநாட்டு பாமாயில் இறக்குமதிக்கு தடை விதித்து, உள்நாட்டில் தயாராகும் தேங்காய் எண்ணெய்யை கொள்முதல் செய்து அங்கன்வாடி மற்றும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும்” என வலியுறுத்தினர்.


