சாலை விபத்தில் நாச்சியார்கோவில் உதவி ஆய்வாளர் பலத்த காயம்
கும்பகோணம்: சாலை விபத்தில் நாச்சியார்கோவில் உதவி ஆய்வாளருக்கு பலத்த காயம்
கும்பகோணம்: கும்பகோணத்தில் சாலையின் குறுக்கே சென்ற ஆமையை காப்பாற்ற முயன்றபோது நிலை தடுமாறி விழுந்ததில் நாச்சியார்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
திருவிடைமருதூர் உட்கோட்டம், நாச்சியார்கோவில் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் சிவக்குமார், வயது 30, தந்தை பெயர் கருப்பசாமி. இவர் இன்று காலை அலுவலக பணி நிமித்தமாக நாச்சியார்கோவில் காவல் நிலையத்திலிருந்து தஞ்சாவூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
கும்பகோணம் புறவழிச்சாலை அசூர் தேவர் சிலை அருகே சென்றபோது சாலையின் குறுக்கே ஆமை ஒன்று சென்றுள்ளது. அதன் மீது மோதாமல் இருக்க வாகனத்தை திருப்பியதில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது முன்னால் இருசக்கர வாகனத்தில் சென்ற இன்னம்பூர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த அஜய், பிரதீபன் ஆகியோர் மீது மோதினார்.
இந்த விபத்தில் உதவி ஆய்வாளர் சிவகுமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அஜய், பிரதீபன் இருவருக்கும் கால்களில் காயங்கள் ஏற்பட்டன. மூவரும் உடனடியாக கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் தங்கராமன், அழகேசன் மற்றும் காவல்துறை ஆய்வாளர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு வந்தனர்.
முதலுதவி சிகிச்சைக்கு பின் உதவி ஆய்வாளர் சிவக்குமார் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.


