சாலையோர வியாபாரிகள் சாலை மறியல்
விருத்தாச்சலத்தில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, சாலையோர வியாபாரிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் காட்டுக்கூடலூர் செல்லும் சாலையில், சுமார் 5 கோடி மதிப்பில், தினசரி காய்கறி அங்காடி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு, ஓராண்டு காலமாக திறக்கப்படாமல் இருந்து வந்தது.
இதனால் காய்கறி வியாபாரிகள், சாலையோரத்தில் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வந்தனர் . இந்நிலையில் இன்று காய்கறி அங்காடி கட்டிடத்தை, தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலமாக, திறந்து வைத்தார்.
இதற்காக நகராட்சி நிர்வாகத்தின் மூலம், திறப்பு விழாவிற்கு முன்பு, சாலை ஓரத்தில் இருந்த வியாபாரிகளை அகற்றி உள்ளனர்.

பின்னர் திறப்பு விழா முடிந்ததும் சாலையோரத்தில் வியாபாரிகள் கடைகள் வைப்பதற்கும், இன்று புதன்கிழமை சந்தை என்பதால், வெளியூரில் வந்த விவசாயிகள், வியாபாரிகள் கடைகள் அமைப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த காய்கறி வியாபாரிகள், விவசாயிகள் திடீரென, விருத்தாச்சலம் காட்டுக்கூடலூர் செல்லும் சாலையில், உள்ள புதிதாக திறக்கப்பட்ட தினசரி காய்கறி அங்காடி முன்பு, அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த விருத்தாச்சலம் காவல்துறையினர் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதன் பேரில் போராட்டத்தை கைவிட்டனர்.
இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


