in

அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலில் ஆவணி சதுர்த்தசி சிறப்பு அபிஷேகம்

அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலில் ஆவணி சதுர்த்தசி சிறப்பு அபிஷேகம்

சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமானுக்கு 15 வகையான திரவியங்களால் அபிஷேகம் – ஏராளமான பக்தர்கள் தரிசனம்

அச்சிறுப்பாக்கம்: செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் திருக்கோயிலில், ஆவணி சதுர்த்தசியை முன்னிட்டு சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

தேவாரம் பாடல் பெற்ற திருத்தலமான ஆட்சீஸ்வரர் திருக்கோயில், இரு கருவறைகளைக் கொண்ட சிறப்புமிக்க சிவாலயமாக விளங்கி வருகிறது. பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளைக் கொண்ட இக்கோயில் பாண்டிய மன்னரால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

தமிழ் வருடத்தில் ஒவ்வொரு சிவாலயத்திலும் ஆண்டுக்கு ஆறு முறை நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும் வழக்கம் உள்ளது. அந்த வகையில் ஆவணி சதுர்த்தசியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில், சிவகாமசுந்தரி மற்றும் நடராஜ பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், விபூதி, இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 15 வகையான சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

அபிஷேகத்தைத் தொடர்ந்து சிவகாமசுந்தரி மற்றும் நடராஜ பெருமானுக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, சிவனடியார்கள் தமிழ் முறை மந்திரங்களை பாராயணம் செய்ய மகா தீபாராதனை நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவகாமசுந்தரி மற்றும் நடராஜ பெருமானை வழிபட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டதுடன், அன்னதானமும் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் சிறப்பு வழிபாடுகளில் பங்கேற்று இறையருள் பெற்றுச் சென்றனர்.

What do you think?

திருவாடானையில் சற்று முன் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி

25 வகையான கேரள உணவுகள் வாழை இலையில் பரிமாற்றம்