கருங்குழி ஸ்ரீ ராகவேந்திரா சுவாமிகள் பிருந்தாவனத்தில் 148-வது பெளர்ணமி தரிசனம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கருங்குழியில் அமைந்துள்ள ஸ்ரீ ராகவேந்திரா சுவாமிகள் பிருந்தாவனத்தில், ஆடி மாத பெளர்ணமியை முன்னிட்டு 148-வது பெளர்ணமி தரிசன விழா பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.
யோக பிரவேசம் செய்து, கடந்த 12 ஆண்டுகளாக பூட்டப்பட்ட அறையில் தவத்தில் ஈடுபட்டு வரும் கருங்குழி பிருந்தாவன் சித்தர் யோகி ரகோத்தமா, பெளர்ணமி நாளையொட்டி பக்தர்களுக்கு அருள்தரிசனம் அளித்தார்.
நண்பகல் 12 மணியளவில் சேஷபீடத்தில் தியானத்தில் அமர்ந்திருந்த சித்தருக்கு, பக்தர்கள் “ஓம் நமசிவாய” மந்திர உச்சரிப்புடன் தங்களது திருக்கரங்களால் அபிஷேகம் செய்து அருளாசி பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து, உலக மக்கள் நலன் மற்றும் சுபிட்சத்திற்காக ஞானலிங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் ஸ்ரீ ராகவேந்திரா சுவாமிகள் பிருந்தாவனத்தில் யாகம் வளர்க்கப்பட்டு, சத்தியநாராயண பூஜை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தீபாராதனையை சித்தர் பக்தர்களுக்கு காண்பித்து அருளாசி வழங்கினார்.
இந்த விழாவில் கருங்குழி மட்டுமின்றி, செங்கல்பட்டு, சென்னை, புதுச்சேரி, பெங்களூரு, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சித்தரின் அருளாசி பெற்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை யோகி ரகோத்தமா சுவாமிகள் அறக்கட்டளையின் முதன்மை அறங்காவலர் ஏழுமலைதாசன் தலைமையில் செய்திருந்தனர். இதில் நிர்வாக அறங்காவலர் ஆர். துளசிங்கம், அறங்காவலர்கள் டி. கண்ணன், கே.ஆர். சுரேஷ், வி. கமலக்கண்ணன், வழக்கறிஞர் சுரேஷ், பி. பரந்தாமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவின் நிறைவில், திரளாகக் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


