தொண்டி கடற்கரையில் திடீரென வைக்கப்பட்ட பலகை: பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு!
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகாவிற்குட்பட்ட தொண்டி பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்திற்கு எதிரே கடற்கரை ஓரம் மணற்பாங்கான பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியை பொதுமக்கள் அனைவரும் பொது பீச் இடமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக, மாலை நேரங்களில் அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடற்கரைக் காற்றை சுவாசித்து மகிழ இங்கு வருவது வழக்கம்.
இந்நிலையில், இன்று கடற்கரைக்குச் சென்ற பொதுமக்களுக்கு ஒரு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு திடீரென ஒரு விளம்பரப் பலகை (போர்டு) வைக்கப்பட்டிருந்தது.
அதில், “அருள்மிகு தர்மசாஸ்தா ஐயப்பன் சுவாமி பேட்டை துள்ளல் இடம்”
என்றும்,
“ஆன்மீக சேவை பணியில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம், தொண்டி” என்றும் எழுதப்பட்டிருந்தது.
அனைத்து மதத்தினரும், பொதுமக்களும் வந்து செல்லும் ஒரு பொது இடத்தில், திடீரென இவ்வாறான ஒரு விளம்பரப் பலகை வைக்கப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்துத் தகவலறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


