in

நாகப்பட்டினத்தில் குப்பைக் கிடங்குப் புகையால் பொதுமக்கள் அவதி: ஆட்சியரிடம் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பு மனு!

நாகப்பட்டினத்தில் குப்பைக் கிடங்குப் புகையால் பொதுமக்கள் அவதி: ஆட்சியரிடம் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பு மனு!

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட மேல கோட்டைவாசல் பகுதியில் செயல்பட்டு வரும் நகராட்சி குப்பைக் கிடங்கில் தொடர்ந்து திறந்தவெளியில் குப்பைகள் எரிக்கப்படுவதால் கடுமையான காற்று மாசுபாடு ஏற்பட்டு, அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

வீ தி லீடர்ஸ்’ (WE THE LEADERS) அமைப்பின் சார்பில் ஆறுமுகம் என்பவர் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்த மனுவை அளித்துள்ளார்.

மேல கோட்டைவாசல் குப்பைக் கிடங்கைச் சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட தெருக்களில் வசிக்கும் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள், நாள்தோறும் குப்பைகள் எரிக்கப்படுவதால் ஏற்படும் அடர்ந்த புகை மற்றும் துர்நாற்றத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் குழந்தைகள், பள்ளி மாணவர்கள், முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் சுவாசப் பிரச்சனை உள்ளவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், நுரையீரல் தொடர்பான நோய்களுக்கு ஆளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாகப்பட்டினத்தின் முக்கிய நுழைவாயிலான மேல கோட்டைவாசல் சாலையை நாள்தோறும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். குப்பைக் கிடங்கில் இருந்து வெளியேறும் அடர்ந்த புகை காரணமாக பார்வைத்திறன் குறைந்து, சாலை விபத்துகள் ஏற்படும் அபாயமும் அதிகரித்துள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கழிவுகளை அறிவியல் பூர்வமாகத் தரம் பிரிக்க தேவையான நவீன இயந்திரங்கள் இல்லாத நிலையில், 2023-ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஒரு கட்டடம் பயன்பாடின்றி இடிந்த நிலையில் இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, திறந்தவெளியில் குப்பைகளை எரிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், நவீன இயந்திரங்கள் மூலம் கழிவுகளைத் தரம் பிரித்து மறுசுழற்சி செய்ய நிரந்தர உள்கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், பயன்பாடின்றி வீணாகியுள்ளதாகக் கூறப்படும் நகராட்சி கட்டடம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சுமார் 30 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்தப் பிரச்சனைக்கு மாவட்ட நிர்வாகம் விரைந்து தலையிட்டு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

What do you think?

நாமக்கல் பரமத்தி வேலூர் ராஜராஜேஸ்வரி ஐயப்பன் மடாலயத்தில் மழை வேண்டி மகா வருணயாகம்

திருவள்ளூர் நகர் ஸ்ரீ ஏரிக்கரை பொன்னியம்மன் சமேத பொன்னீஸ்வரர் ஆலய கூழ்வார்த்தல் திருவிழா.