in

ஜே.சி.பி மற்றும் டிராக்டர் உரிமையாளர்கள் 3 நாள் அடையாள வேலைநிறுத்தம்

ஜே.சி.பி மற்றும் டிராக்டர் உரிமையாளர்கள் 3 நாள் அடையாள வேலைநிறுத்தம்

 

ஓசூரில் ஜே.சி.பி மற்றும் டிராக்டர் உரிமையாளர்கள் 3 நாள் அடையாள வேலைநிறுத்தம் – புதிய வாடகை கட்டணம் அறிவிப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், டீசல் மற்றும் உதிரி பாகங்களின் விலை உயர்வைக் கண்டித்தும், புதிய வாடகை கட்டணத்தை நடைமுறைப்படுத்தக் கோரியும் ஜே.சி.பி மற்றும் டிராக்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் மூன்று நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஜே.சி.பி மற்றும் டிராக்டர் உரிமையாளர்கள் ஒன்றிணைந்து, நேற்று (நவம்பர் 26) முதல் நாளை (சனிக்கிழமை) வரை மூன்று நாட்களுக்கு அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

இந்தப் போராட்டத்தில் சுமார் 150-க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

சர்வதேசப் போர்ச் சூழலால் உயர்ந்துள்ள டீசல் மற்றும் ஆயில் விலை, புதிய வாகனங்களின் விலை உயர்வு (25 லட்சத்திலிருந்து 42 லட்சம் ரூபாயாக உயர்வு), இரட்டிப்பான மாதத் தவணை (EMI), சாலை வரி, இன்சூரன்ஸ், டயர் மற்றும் உதிரி பாகங்களின் கடுமையான விலை உயர்வு காரணமாகத் தொழிலை தொடர்ந்து நடத்த முடியாத இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும், ஆபரேட்டர்களின் வாழ்வாதாரச் செலவு உயர்ந்துள்ளதால் அவர்களுக்கான சம்பளத்தையும் உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

சூளகிரி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கனவே புதிய கட்டணம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஓசூர் ஜே.சி.பி மற்றும் டிராக்டர் உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் நவம்பர் 26-ஆம் தேதி முதல் புதிய வாடகை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, ஜே.சி.பி (JCB), ஒரு மணி நேர வாடகை: 1,200 ரூபாயிலிருந்து 1,500 ரூபாயாகவும், குறைந்தபட்ச கட்டணம் (3 மணி நேரத்திற்குள்) 4,500 ரூபாயிலிருந்து ₹5,500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல, டிராக்டர் (Tractor), ஒரு நாள் வாடகை 3,500 ரூபாயிலிருந்து, 4,500 ரூபாயாகவும், அரை நாள் (1/2 நாள்) வாடகை 3,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளதோடு, லேபர் ஒரு லோடு 1,500 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக ஜேசிபி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக, ஓசூர் ஜே.சி.பி உரிமையாளர்கள் சங்க நிர்வாகி ரத்தினம் தெரிவிக்கையில்,

டீசல், உதிரி பாகங்கள் மற்றும் ஆபரேட்டர்களின் சம்பளம் உயர்ந்துள்ளதால் பழைய விலைக்கு வண்டிகளை இயக்க முடியவில்லை. பொதுமக்களுக்கு எங்களது கஷ்டத்தைத் தெரியப்படுத்தவே இந்த 3 நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம்.

அரசுக்கு நாங்கள் எந்த கோரிக்கை மனுவும் அளிக்கவில்லை; பொதுமக்கள் எங்களது சூழ்நிலையைப் புரிந்துகொண்டு புதிய கட்டணத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.. என்றார்.

அதேபோல ஜே.சி.பி உரிமையாளர் குரேந்திர பிரசாத், கூறும்போது

இந்த வேலைநிறுத்தத்தால் ஓசூரில் கட்டுமானப் பணிகள், விவசாயிகள் மற்றும் மேஸ்திரிகள் எனப் பல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், ஆபரேட்டர்களின் சம்பளம் 15,000 ரூபாயிலிருந்து 35,000 ரூபாயாகவும், வாகனத்தின் EMI 50,000 ரூபாயிலிருந்து 1 லட்சம் ரூபாய்வரையிலும் உயர்ந்துள்ளதால் வாடகையை உயர்த்துவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. பொதுமக்கள் ஒத்துழைப்பு தந்தால் மட்டுமே எங்களால் தொடர்ந்து சேவை செய்ய முடியும்.. என்று தெரிவித்துள்ளார்.

சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏற்கனவே புதிய கட்டணம் நடைமுறையில் உள்ள நிலையில், ஓசூரில் அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் புதிய வாடகை உயர்வுக்குப் பொதுமக்களும், கட்டுமானத் துறையினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனச் சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What do you think?

ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு!