பிரம்மாண்ட விஷ்ணு தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு!
ஓசூர் ரங்கோத் பண்டிட் அக்ரஹாரத்தில் ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் கார்த்திகை மாத பிரம்மாண்ட விஷ்ணு தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு!
தன்வந்திரி, சுதர்சன, ஹயக்ரீவர், நரசிம்மர் ஹோமங்கள் – சொக்கப்பனை கொளுத்தி பக்தர்கள் வழிபாடு!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ரங்கோத் பண்டிட் அக்ரஹாரத்தில் அமைந்துள்ள ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோவிலில், கார்த்திகை மாத ரோகிணி நட்சத்திரத்தை முன்னிட்டு விஷ்ணு தீபம் மற்றும் ஸ்ரீ பஞ்சநாத்ரா தீப வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதையொட்டி, அதிகாலையில் சுவாமிக்கு திருமஞ்சனம் செய்து, பல்வேறு புனிதப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம், ஆராதனை மற்றும் அர்ச்சனைகள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து, கோவில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு உலக நன்மை வேண்டி தன்வந்திரி ஹோமம், சுதர்சன ஹோமம், ஹயக்ரீவர் ஹோமம், நரசிம்மர் ஹோமம் உள்ளிட்ட சிறப்பு ஹோமங்கள் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றன.

பின்னர், ஹோமத்தில் பூஜிக்கப்பட்ட புனித கலச நீரைக் கொண்டு சுவாமிக்கு புரோக்ஷணம் செய்யப்பட்டு, கும்ப தீபம், நட்சத்திர தீபம் உள்ளிட்ட பல்வேறு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன.
விழாவின் முக்கிய நிகழ்வாக, கார்த்திகை மாத சிறப்பை எடுத்துரைக்கும் வகையில் பிரம்மாண்டமான விஷ்ணு தீபம் ஏற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்திலும், ஆலயத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஏராளமான அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு பக்தர்கள் பக்தியுடன் வழிபாடு செய்தனர்.
தொடர்ந்து, பாரம்பரிய முறைப்படி சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதனை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டு தரிசனம் செய்தனர்.
நிறைவாக, ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமி சிறப்பு அலங்காரத்தில் கோவில் வளாகத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விஷ்ணு தீப தரிசனம் செய்து சுவாமியை வழிபட்டனர்.


