in

ஓசூர் அழகன் மலை முருகன் கோவிலில் திருக்கல்யாண வைபவம் கோலாகலம்!

ஓசூர் அழகன் மலை முருகன் கோவிலில் திருக்கல்யாண வைபவம் கோலாகலம்!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பாகலூர் சாலையில் மாநகராட்சி அலுவலகம் எதிரே அமைந்துள்ள அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேத அழகன் முருகன் திருக்கோவிலில் முதலாம் ஆண்டு கந்த சஷ்டி பெருவிழாவின் நிறைவு நாளை முன்னிட்டு, அழகன் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதனை முன்னிட்டு உற்சவர் அழகன் முருகப்பெருமானுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். மேலும், கோவிலில் தனி சன்னதி கொண்டுள்ள இடும்பன் சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.

 

தொடர்ந்து கோவில் வளாகத்தில் யாகம் வளர்க்கப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க மகா பூர்ணாஹுதி நடைபெற்றது. பின்னர் மணக்கோலத்தில் எழுந்தருளிய வள்ளி, தெய்வானை சமேத அழகன் முருகப்பெருமானுக்கு, ஆலய பூசகர் நெடுங்குடி மணிகண்ட சிவாச்சாரியார் தலைமையில் வேத மந்திரங்கள் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

அப்போது வள்ளி, தெய்வானைக்கு அழகன் முருகப்பெருமான் திருமாங்கல்யம் அணிவித்தார். தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணை முட்டியது.

இந்த விழாவில் ஓசூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி தர்மகர்த்தா ரத்தினம், தலைவர் ஜெயக்குமார் ரெட்டி, பொருளாளர் சீனிவாசன் மற்றும் கமிட்டி நிர்வாகத்தினர் சிறப்பாகச் செய்திருந்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் கோவில் கமிட்டி நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

What do you think?

குயவர்பாளையம் முத்துக்குமாரசுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா

ஓசூர் ஸ்ரீ வேல்முருகன் திருக்கோயிலில் திருக்கல்யாண வைபவம் கோலாகலம்!