குயவர்பாளையம் முத்துக்குமாரசுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா
புதுச்சேரி குயவர்பாளையம் முத்துக்குமாரசுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா – முருகப்பெருமான் திருக்கல்யாண வைபவம் கோலாகலம் நடைபெற்றது…
புதுச்சேரி குயவர்பாளையம் லெனின் வீதியில் அமைந்துள்ள அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோவிலில், பராபவ ஆண்டு கந்தசஷ்டி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
கடந்த 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில், நாள்தோறும் சத்ரு சம்ஹார திரிசதி ஹோமம், சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம், தீபாராதனை மற்றும் உற்சவர் வீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதன் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார வைபவம் நேற்று முன்தினம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் முருகப்பெருமான் சக்திவேல் கொண்டு சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்வைக் காண ஏராளமான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, இன்று முருகப்பெருமான் தெய்வானை அம்மையுடன் திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய முருகப்பெருமானுக்கு வேத மந்திரங்கள் முழங்க, மேளதாளங்கள் ஒலிக்க திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இவ்விழாவில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் மற்றும் ஆலய நிர்வாக அதிகாரி டாக்டர் குமரன் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாக அதிகாரி டாக்டர் குமரன் மற்றும் ஆலய அர்ச்சகர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

