in

பெண் போல பேசி 3 கோடி ரூபாய் வரை மோசடி

பெண் போல பேசி 3 கோடி ரூபாய் வரை மோசடி

 

பெண் போல பேசி எட்டு மாநிலங்களில் 3 கோடி ரூபாய் வரை மோசடி ..
நைஜீரியாவை சேர்ந்தவர் ‘பான் இந்தியா’ குற்றவாளி கைது…

புதுச்சேரி முதலியார்பேட்டையை சேர்ந்த 44 வயது நபர் பேஸ்புக் மூலமாக லண்டனில் இருந்து பெண் ஒருவருடன் நட்பாக பேசி பழகினார். அவர், விலை உயர்ந்த பரிசுப்பொருள் அனுப்பி வைப்பதாக கூறினார்.

தொடர்ந்து வெளிநாட்டில் இருந்து பரிசுப்பொருள் வந்திருப்பதாக கூறி டெல்லியில் இருந்து சுங்கத்துறை அதிகாரிகள் பேசுவதாக கூறி வரியாக ரூ.13 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றனர்.

இதனை நம்பி அவரும் பணத்தை செலுத்தினார். அதன்பின் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது டெல்லியில் இருந்தபடி நைஜீரியா நாட்டை சேர்ந்த மொடேஸ்டஸ் ஒகேசி (வயது33) என்பவர் பெண்போல பேசி மோசடி செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் அவரை கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவரை நீதிபதி முன் அஜர்ப்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

கைதான நைஜீரியா மொடெஸ்டஸ் ஒகேசிடம், சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் பேஸ்புக்கில் பெண் போல பேசி பலரிடம் மோசடி செய்தது தெரிய வந்துள்ளது. அதாவது புதுச்சேரி மட்டுமின்றி தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், பஞ்சாப், குஜராத், அரியானா, டெல்லி ஆகிய 8 மாநிலங்களை சேர்ந்த 22 நபர்களிடம் ரூ.3 கோடிக்கு மேல் மோசடி செய்து பணம் பறித்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த வழக்கு குறித்து செய்தியாளர்களை சந்தித்த சைபர் கிரைம் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராகவ், புதுச்சேரியில் சமூக வலைதளத்தில் இதுபோன்ற மோசடியில் சிக்கி பணத்தை இழந்தவர்கள் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என அறிமுகமாகும் முன்பின் தெரியாத நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வெளிநாட்டில் இருந்து பரிசுப்பொருள், பணம், தங்க நகைகள், விலை உயர்ந்த பொருட்கள் அனுப்பியதாக கூறி சுங்க கட்டணம், வரி, அபராதம் போன்ற பெயர்களில் பணம் கேட்பவர்கள் நம்பி பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்.

சுங்கத்துறை அதிகாரிகள் அல்லது அரசு அதிகாரிகள் எனக்கூறி மிரட்டி பணம் கேட்பவர்களின் பேச்சை நம்ப வேண்டாம். சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரப்பூர்வ வழிகளில் சரிபார்க்க வேண்டும்.

சமூக வலைதளங்களில் அறிமுகமாகும் நபர்களின் உண்மையான அடையாளத்தை உறுதி செய்யாமல் அவர்களுடன் பணம் பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டாம்.

சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்பான ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் ஆன்லைன் மோசடி மூலம் பணத்தை இழந்தாலும் உடனடியாக சைபர் குற்றத்திற்கான கட்டணமில்லா எண் 1930 அல்லது 9489205246 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்..

What do you think?

திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கோலாகல தொடக்கம்!

பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை