கிழக்கு கடற்கரை சாலை – காரங்காடு இணைப்பு சாலையில் மண் அரிப்பு: உடனடியாக சீரமைக்க பொதுமக்கள் வேண்டுகோள்!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா, கிழக்கு கடற்கரை சாலையிலிருந்து ஏ. மணக்குடி அருகே பிரிந்து செல்லும் காரங்காடு மற்றும் முள்ளிமுனை ஆகிய கடற்கரை கிராமங்களுக்கான இணைப்புச் சாலை, மழை காரணமாக கடுமையாக சேதமடைந்துள்ளது.
சுமார் 1.25 கிலோமீட்டர் தொலைவு கொண்ட இந்த கிராமச் சாலை அமைக்கப்பட்டு சில மாதங்களே ஆன நிலையில், தற்போது பெய்த கனமழையின் காரணமாக சாலையின் இரு புறங்களிலும் பலத்த மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக புதிதாக போடப்பட்ட சாலை சேதமடையும் அபாய நிலை உருவாகியுள்ளது.
காரங்காடு மற்றும் முள்ளிமுனை ஆகிய இரண்டு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும், மீனவர்களும் தங்களின் அன்றாட போக்குவரத்து தேவைகளுக்காக இந்த ஒரு சாலையையே முழுமையாக நம்பியுள்ளனர். எனவே, மேலும் அசம்பாவிதம் எதுவும் நடக்கும் முன், தாலுகா நிர்வாகமும் நெடுஞ்சாலைத்துறையும் தலையிட்டு, சேதமடைந்த சாலையின் பக்கவாட்டுப் பகுதிகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

