in

ஓசூர் ஸ்ரீ வேல்முருகன் கோவிலில் ஸ்கந்த சஷ்டி பெருவிழா கோலாகலம்!

ஓசூர் ஸ்ரீ வேல்முருகன் கோவிலில் ஸ்கந்த சஷ்டி பெருவிழா கோலாகலம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வேல்முருகன் திருக்கோவிலில் ஸ்கந்த சஷ்டி பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெற உள்ள நிலையில், மூலவர் வேல்முருகப் பெருமான் தங்க கவச அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, பெரியார் நகர் பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்ததும், பிரசித்தி பெற்றதுமான ஸ்ரீ வேல்முருகன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஸ்கந்த சஷ்டி பெருவிழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

அந்த வகையில், இந்த ஆண்டிற்கான ஸ்கந்த சஷ்டி உற்சவம் கடந்த 10-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கலச ஸ்தாபனத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. விழாவின் ஒவ்வொரு நாளும் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வந்தன.

உற்சவத்தின் ஐந்தாம் நாளான நேற்று, சூரனை வதம் செய்வதற்காகத் தவமிருந்த முருகப்பெருமான், அன்னை பார்வதி தேவியிடமிருந்து சக்திவேல் வாங்கும் வைபவம் நடைபெற்றது. இதற்காக, கோவில் வளாகத்தில் அம்பாளுடன் அருள்பாலிக்கும் சோமேஸ்வரர் தனி சன்னிதியில் திருவேலுக்குப் பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, பக்தர் ஒருவர் பரவசத்துடன் நடனமாடியபடி சக்திவேலை எடுத்து வந்து உற்சவமூர்த்தியிடம் சமர்ப்பித்தார். அதனைத் தொடர்ந்து, மூலவர் வேல்முருகன் வெள்ளிக்கவச அலங்காரத்தில் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் உலகெங்கும் உள்ள முருகன் திருக்கோவில்களில் இன்று நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு, ஓசூர் ஸ்ரீ வேல்முருகன் திருக்கோவிலில் அதிகாலை முதலே சிறப்பு வழிபாடுகள் களைகட்டத் தொடங்கின. பக்தர்கள் கொண்டு வந்த பால், தயிர், வெண்ணெய், மஞ்சள், குங்குமம், சந்தனம் மற்றும் திருநீறு உள்ளிட்ட நறுமணத் திரவியங்களால் மூலவர் ஸ்ரீ வேல்முருகனுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.

அபிஷேகத்தைத் தொடர்ந்து, மூலவர் வேல்முருகப் பெருமான் தங்க கவசம் மற்றும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ராஜ அலங்காரத்தில் காட்சி அளித்தார். வேத மந்திரங்கள் முழங்க முருகப்பெருமானுக்கு மகா மங்கள ஆரத்தி மற்றும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தங்க கவச அலங்காரத்தில் ஜொலித்த முருகப்பெருமானை அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வழிபட்டனர்.

தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வான முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரப் பெருவிழா இன்று மாலை வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளைத் திருக்கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாகச் செய்து வருகின்றனர்.

What do you think?

குமரக்கடவுள் ஆலயத்தில் சத்ரு சம்கார திரிஷதி அர்ச்சனை 33 அபிஷேகம் அலங்கார மகா கும்ப தீபாதாரணை கந்த சஷ்டி நிறைவு விழா

புதுச்சேரி முத்துவிநாயகர் ஆலயத்தில் 6-ஆம் ஆண்டு கந்த சஷ்டி விழா!