ஓசூர் ஸ்ரீ முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா: நான்காம் நாள் ஏகதின இலட்சார்ச்சனை கோலாகலம்!
ஞானஸ்கந்தர் திருக்கோலத்தில் அருள்பாலித்த முருகப்பெருமான் – மகா தீபாராதனை, கும்ப தீபம், நட்சத்திர தீபம் காண்பித்து சிறப்பு வழிபாடு
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பிருந்தாவனம் நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகப்பெருமான் திருக்கோவிலில் நடைபெற்று வரும் கந்த சஷ்டி பெருவிழாவின் நான்காம் நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் வெகு விமரிசையாக நடைபெற்றன.

இதன் ஒரு பகுதியாக, காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை ஏகதின இலட்சார்ச்சனை நடைபெற்றது. இதில் முருகப்பெருமானுக்கு பல்வேறு சிறப்பு அர்ச்சனைகள் மற்றும் பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து, முருகப்பெருமான் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஞானஸ்கந்தர் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதனைத் தொடர்ந்து, மூலவர் மற்றும் உற்சவர் முருகப்பெருமானுக்கு மகா தீபாராதனை, கும்ப தீபம், நட்சத்திர தீபம் உள்ளிட்ட பல்வேறு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன. அப்போது பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி முருகப்பெருமானை வழிபட்டனர்.
ஏகதின இலட்சார்ச்சனையில் பங்கேற்ற பக்தர்களுக்கு அர்ச்சனை செய்யப்பட்ட மலர்கள் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. கந்த சஷ்டி பெருவிழாவின் நான்காம் நாள் சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்.


