in

புதுச்சேரியில் நாளை முதல் காலவரையற்ற கோழி விற்பனையாளர்கள் வேலைநிறுத்தம்; 600-க்கும் மேற்பட்ட கடைகள் மூடல்

புதுச்சேரியில் நாளை முதல் காலவரையற்ற கோழி விற்பனையாளர்கள் வேலைநிறுத்தம்; 600-க்கும் மேற்பட்ட கடைகள் மூடல்

புதுச்சேரி: தமிழ்நாடு கோழி விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ள காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக, புதுச்சேரி மாநில கோழி விற்பனையாளர்கள் சங்கமும் நாளை (ஜூலை 31) முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளது. இதனால் புதுச்சேரியில் 600-க்கும் மேற்பட்ட கோழி மொத்த மற்றும் சில்லரை விற்பனைக் கடைகள் மூடப்படவுள்ளன.

கோழிகளுக்கு தீவனம் வழங்கும் முறை மற்றும் அதன் மூலம் கோழிகளின் எடையை அதிகரிக்கும் புதிய நடைமுறையால் விலை உயர்வு, சுகாதார பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதோடு, விற்பனையாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுவதாக கூறி இந்த காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி மாநில கோழி விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் பன்னீர்செல்வம் கூறுகையில், புதுச்சேரியில் நாள்தோறும் சுமார் 60 ஆயிரம் கிலோ பிராய்லர் கோழி இறைச்சி விற்பனையாகிறது. இதில் சுமார் 20 ஆயிரம் கிலோ, அதாவது 40 சதவீதம் ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் கேட்டரிங் நிறுவனங்களுக்கு விநியோகிக்கப்படுகிறது என்றார்.

வேலைநிறுத்தம் நீடித்தால், கோழி இறைச்சி விற்பனை முழுமையாக பாதிக்கப்படுவதுடன், ஹோட்டல் தொழிலுக்கும் கடும் பாதிப்பு ஏற்படும். மேலும், சுற்றுலா நகரமான புதுச்சேரியில் பொதுமக்களுக்கு பிராய்லர் கோழி தட்டுப்பாடு உருவாகும் சூழல் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, புதுச்சேரி மாநில கோழிக்கறி விற்பனையாளர்கள் சங்க நிர்வாகிகள் முதலமைச்சர் என். ரங்கசாமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட முதலமைச்சர், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

What do you think?

மயிலாடுதுறையில் பணி நிரந்தரம் கோரி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பருவகால பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்:-

சுடுகாட்டில் கொட்டப்படும் குப்பைக் கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார்