சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா. திரளான பக்தர்கள் பங்கேற்று தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
சிதம்பரம் பஸ் நிலையம் எதிரில் கீழத்தெரு அருள்மிகு மாரியம்மன் கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் தீமிதி திருவிழா உற்சாகமாக கொண்டாடப்படும்.
இந்த ஆண்டு தீமிதி திருவிழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி வீதியுலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இன்று தீமிதி திருவிழா நடைபெற்றது.
காலை முதல் அங்கபிரதட்சணம், தீ மிதிப்பவர்களுக்கு காப்பு கட்டுதல், அலகு தரிசனம், அக்னி சட்டி எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக தீமிதி திருவிழா மாலையில் துவங்கியது.
அக்னி சட்டி ,சக்தி கரகம் மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்து தீக்குழியில் இறங்கியது. இதைத்தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மஞ்சளாடை அணிந்து பக்தி பரவசத்துடன் தீக்குழியில் இறங்கி தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.


