சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தின் மாடியில் தீ விபத்து
சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தின் மாடியில் தீ விபத்து. 13 வீல் சேர்கள் எரிந்து நாசம். தேர்தல் நேரத்தில் பயன்படுத்தப்படும் துண்டுப் பிரசுரங்களும் எரிந்து நாசமானது.
சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தின் மாடியில் தேர்தல் நேரத்தில் பயன்படுத்தப்படும் வீல் சேர்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மேலும் அந்த இடத்தில் தேர்தல் நேரத்தில் பயன்படுத்தப்படும் துண்டுப் பிரசுரங்களும் இருந்தன.
இந்நிலையில் இன்று காலை மாடியில் வீல் சேர்கள் இருந்த இடத்திலிருந்து புகை மூட்டம் ஏற்பட்டது. பின்னர் இதைப்பார்த்த நகராட்சி ஊழியர்கள் மொட்டை மாடிக்கு சென்று பார்த்தபோது அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த வீல் சேர்கள் எரிந்து கொண்டிருந்தது.

பின்னர் இதுகுறித்து சிதம்பரம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத் துறை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள் மாடியில் இருந்த 13 வீல்சேர்கள் எரிந்து நாசமானது.
மேலும் தேர்தல் நேரத்தில் பயன்படுத்தப்படும் துண்டு பிரசுரங்கள், விழிப்புணர்வு பிரசுரங்கள் போன்றவைகளும் எரிந்து நாசமானது. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து சிதம்பரம் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

