in

தீபாவளி பண்டிகை: 5,000-க்கும் மேற்பட்ட ஆதரவற்றோருக்கு புத்தாடை, உணவு வழங்கிய தன்னார்வலர்!

தீபாவளி பண்டிகை: 5,000-க்கும் மேற்பட்ட ஆதரவற்றோருக்கு புத்தாடை, உணவு வழங்கிய தன்னார்வலர்!

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாரதிமோகன், ‘பாரதிமோகன் அறக்கட்டளை’ மூலம் கடந்த பல ஆண்டுகளாகச் சாலையோரம் ஆதரவின்றித் திரியும் நபர்களுக்குத் தினந்தோறும் உணவு வழங்கி வருகிறார்.

மேலும், மனநலம் பாதிக்கப்பட்டுத் திரிபவர்களை மீட்டு, முடி திருத்தம் செய்து, குளிக்க வைத்து, புத்தாடை அணிவித்து, அவர்களை உரிய காப்பகங்களிலோ அல்லது குடும்பத்தினரிடமோ ஒப்படைக்கும் நற்பணிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் உள்ள பேருந்து நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் தங்கியுள்ள 5,000-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற ஏழை எளிய மக்களுக்கு ஈரோட்டிலிருந்து பிரத்யேகமாக வாங்கி வரப்பட்ட புத்தாடைகள் வழங்கப்பட்டன. மேலும், தீபாவளி அன்று சுமார் 1,500 பேருக்குச் சுடச்சுட சிக்கன் பிரியாணி மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டு அவர்களுடன் இணைந்து தீபாவளி உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது

குறிப்பாக, உலகப் புகழ்பெற்ற சுற்றுலா மற்றும் ஆன்மிகத் தலங்களான வேளாங்கண்ணி பேராலயம், நாகூர் தர்கா மற்றும் நாகை பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் குடும்பத்தினரால் கைவிடப்பட்ட முதியவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட நபர்களை நேரில் சந்தித்து, அவர்களையும் தனது குடும்பத்தினராகக் கருதி புத்தாடைகளை வழங்கி மகிழ்வித்தார்.

பண்டிகை நாட்களில் யாரும் கண்டுகொள்ளாத சாலையோர மனிதர்களின் துயரறிந்து, தொடர்ந்து களத்தில் நின்று உதவி செய்து வரும் தன்னார்வலர் பாரதிமோகனின் இந்த மனிதநேயப் பணியைப் பொதுமக்கள் மற்றும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் மனதாரப் பாராட்டி வருகின்றனர்.

What do you think?

மேகமலை மக்களுக்கு உச்சநீதிமன்ற உத்தரவால் பெரும் நிம்மதி

ஐப்பசி திருக்கல்யாண வைபவம்