நாகப்பட்டினத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார பேரணி: பள்ளி மாணவர்கள் எழுச்சியுடன் பங்கேற்பு
நாகப்பட்டினம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் 2026-ஐ முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நேர்மையே வளமை மற்றும் நெஞ்சம் நிமிர் – லஞ்சம் தவிர் என்ற முழக்கங்களை முன்னிறுத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்தப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
இப்பேரணி லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. இமயவர்மன் தலைமையில் நடைபெற்றது. நாகப்பட்டினம் ரயில்வே நிலையம் அருகே இருந்து தொடங்கிய இப்பேரணியை உதவி காவல் கண்காணிப்பாளர் பிரியங்கா பார்கோ கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் சி.எஸ்.ஐ. பள்ளி மாணவர்கள் திரளாகக் கலந்துகொண்டு, ஊழல் மற்றும் லஞ்சத்திற்கு எதிரான விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பியவாறு ஊர்வலமாகச் சென்றனர். நாலுகால் மண்டபம், நீலா தெற்கு வீதி, நீதிமன்ற வளாகம் வழியாகச் சென்ற பேரணி, புதிய பேருந்து நிலையத்தை அடைந்து நிறைவுற்றது.
இந்நிகழ்வில் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் உள்ளிட்ட காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
பேரணியின் போது, ‘லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம்’ என்பதை வலியுறுத்தும் துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. மேலும், லஞ்சம் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநரகத்தின் வாட்ஸ்அப் எண் (9498180936) மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத் தொடர்பு எண்கள் (தொலைபேசி: 04365-248460, செல்போன்: 8300050200, 9788994343) ஆகியவை பொதுமக்களின் பார்வைக்கு வழங்கப்பட்டன.


