திருவாவடுதுறை ஆதீனத்தில் மகளிருக்கு இலவச புற்றுநோய் கண்டறியும் முகாம்
கும்பகோணம் கிராண்ட் ரோட்டரி சங்கம் மற்றும் ஸ்ரீ மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி சார்பில், திருவாவடுதுறை ஆதீன தலைமை மடத்தில் மகளிருக்கான இலவச புற்றுநோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த முகாமை திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் தொடங்கி வைத்து அருளாசி வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, ஆதீன தலைமை மடத்தில் பணியாற்றும் 50-க்கும் மேற்பட்ட பெண் பணியாளர்களுக்கு, அதிநவீன மருத்துவக் கருவிகள் மூலம் இலவச புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் கும்பகோணம் தொழிலதிபர் பாலாஜி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். கும்பகோணம் கிராண்ட் ரோட்டரி சங்கத் தலைவர் புகழேந்தி தலைமை வகித்தார்.
மேலும், ரோட்டரி சங்க நிர்வாகிகள் பூமா, கணேஷ், செந்தில்குமரன், நடராஜன், ஹரிபாலன் மற்றும் திருவாவடுதுறை ஆதீன தென்மண்டல மேற்பார்வையாளர் முத்துகிருஷ்ணன், ஆதீனப் பொது மேலாளர் மனவழகன், கண்காணிப்பாளர் சண்முகம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியின் நிறைவில் ரோட்டரி சங்கச் செயலர் விஷ்ணு ராம் நன்றி கூறினார்.
.

