செங்குன்றம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா! 110 மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கிய பிரேமலதா விஜயகாந்த்!
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் பகுதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா, கல்லூரி தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி கௌரவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய பல்கலைக்கழக வேந்தர், “பட்டம் என்பது வெறும் சான்றிதழ் அல்ல; சமூகத்திற்குச் சேவை செய்யும் பொறுப்பு” என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரேமலதா விஜயகாந்த், “யாராக இருந்தாலும் தவறு செய்தால் தண்டனை அனுபவிக்க வேண்டும். கேப்டன் சொன்னதைப் போல், உப்பு தின்னா தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும்” என்று தெரிவித்தார்.
மேலும், ஒவ்வொரு மாணவரின் உண்மையான கனவு கல்லூரியில் படித்து முதல் பட்டம் பெறுவதுதான் என்றும், அது அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் பெருமைக்குரிய தருணம் என்றும் கூறினார்.
கல்வியின் முக்கியத்துவம் குறித்து கேப்டன் விஜயகாந்த் தன்னிடம் அடிக்கடி கூறியுள்ளதாகவும், இந்தப் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொள்வது மிகவும் பெருமையாகவும், மறக்க முடியாத நாளாகவும் இருப்பதாகத் தெரிவித்தார்.
இந்தப் பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 110 மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில் 90 பேர் MBA, 12 பேர் M.Sc Clinical Embryology, 8 பேர் Fellows in Reproductive Medicine படிப்பை முடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


