நாகை மாவட்டத்தில் ஜல் ஜீவன் திட்ட முறைகேடுகளை ஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும்: பாஜக ஆட்சியரிடம் மனு
நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஜல் ஜீவன் திட்டப் பணிகளில் முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும், பணிகளை ஆய்வு செய்ய தனிக் குழு அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
நாகை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் மத்திய அரசின் ‘ஜல் ஜீவன் மிஷன்’ திட்டத்தின் கீழ், ரூ.1,752 கோடி மதிப்பீட்டில் அனைத்து வீடுகளுக்கும் புதிய குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இந்தத் திட்டத்தில் பெரும் முறைகேடுகள் நிகழ்ந்து வருவதாகவும், பணிகள் மிகவும் மெத்தனமாகவும் காலதாமதமாகவும் மேற்கொள்ளப்படுவதாகவும் பாஜக குற்றம்சாட்டியுள்ளது. பணிகள் முறையாக நடைபெறாத காரணத்தால் கீழ்வேளூர், கீழையூர், வேதாரண்யம், திருமருகல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுதொடர்பாக, கீழ்வேளூர் தொகுதி மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜோதிபாஸ், மாவட்ட துணைத் தலைவர் குமார், மாவட்ட பொதுச் செயலாளர் சந்தோஷ் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் நாகை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
அப்போது, மத்திய அரசின் குடிநீர் திட்டப் பணிகளில் நடைபெறும் குளறுபடிகளை உடனடியாகக் கள ஆய்வு செய்ய ஒரு தனிக் குழுவை அமைக்க வேண்டும் என்றும், குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க பணிகளை விரைந்து தரமாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தினர்

