நெய்வேலி தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் தர்ணா போராட்டம்!
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே நெய்வேலி, ஊமங்கலம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் தனியார் மின் உற்பத்தி நிலையத்திற்கு (எம்.இ.ஐ.எல்.எனரஜி பிரைவேட் லிமிடெட்) பொதுமக்கள் சுமார் 250 ஏக்கர் நிலங்களை கொடுத்துள்ளனர். அங்கு சுமார் 70-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் தூய்மைப் பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் கூலி வேலை செய்யும் பணியாளர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை சம்பளம் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தூய்மைப் பணியாளர்களான எங்களுக்கு இரண்டு ஆண்டுகளாகியும் ரூ.800 மட்டுமே உயர்த்தி வழங்குகிறார்கள் என்று கூறி சம்பளத்தை உயர்த்தித் தர வலியுறுத்தி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து நிர்வாகம் தரப்பில் தொழிலாளர்களை அழைத்து சுமுக பேச்சுவார்த்தை நடத்தியும், அதிகாரிகள் யாரும் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை என கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து இன்று பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் பணிக்கு செல்லும் நுழைவாயில் பாதையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விருத்தாசலம் வட்டாட்சியர் முருகன் மற்றும் நெய்வேலி காவல் துணை கண்காணிப்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சம்பந்தப்பட்ட மின் உற்பத்தி நிறுவன அதிகாரிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தியபோது சமரசம் ஏற்படவில்லை.
இதையடுத்து வட்டாட்சியர் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை சந்தித்து, கடலூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையரை சந்தித்து முறையிடுமாறு அறிவுறுத்தினர்.
அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் பேச்சுவார்த்தைக்காக கடலூர் சென்றுள்ளனர். விரைவில் நடவடிக்கை எடுத்து உரிய சம்பளத்தை உயர்த்தித் தரவில்லை என்றால் அனைத்து தொழிலாளர்களையும் ஒன்று திரட்டி பெரிய அளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரித்தனர்.


