போலி கல்விச் சான்றிதழ் தயாரித்து ரூ.33.27 லட்சம் மோசடி – 5 பேர் மீது வழக்குப்பதிவு!
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கிளைகளைத் தொடங்கி, இன்ஸ்டாகிராம் மூலம் விளம்பரம் செய்து, வெளிநாடுகளில் உயர்கல்வி பயில போலிச் சான்றிதழ்கள் தயாரித்து 50-க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் ரூ.33.27 லட்சம் வரை மோசடி செய்ததாகப் புகார் எழுந்துள்ளது.


தஞ்சாவூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், இங்கிலாந்தில் உயர்கல்வி பயில்வதற்காக பழனிவேல் ஓவர்சீஸ் நிறுவனத்தை அணுகியுள்ளார். அவரிடம் கல்விக்கடன், விசா மற்றும் இதர செலவுகளுக்காக மொத்தம் ரூ.33.27 லட்சம் வசூலித்து இங்கிலாந்துக்கு அனுப்பியுள்ளனர்.
ஆனால், அங்கு பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்த கல்விச் சான்றிதழ் போலியானது எனக் கூறி நிராகரிக்கப்பட்டதால், அவர் மீண்டும் சொந்த ஊர் திரும்பியுள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், கோவை, மதுரை, நாமக்கல், காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கல்வி ஆலோசனை மையங்கள் அமைத்து, 50-க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் மோசடியில் ஈடுபட்டதாகத் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, நிறுவன உரிமையாளர் நடராஜன் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


