in

விருதுக்கு பெருமை சேர்த்த விருதாளர்


Watch – YouTube Click

விருதுக்கு பெருமை சேர்த்த விருதாளர்

விருதுகளால் விருது பெறுபவர்கள் சிறப்படைவது போலவே, விருதாளர்களாலும் விருதுகள் பெருமை பெறுகின்றன. சாதனையாளர்களை எவ்வித சமரசமும் இல்லாமல் தேடிப்பிடித்து விருதுகளை வழங்கும்போது, விருதுக்கும் பெருமை; விருது பெறுபவர்களுக்கும் பெருமை. அதனால்தான் ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருதான “ஞானபீடம்’, இலக்கியவாதிகளின் கனவாக இருந்து வருகிறது.

சாஹூ சாந்திபிரசாத் ஜெயின் என்கிற தொழிலதிபரால் 1941ஆம் ஆண்டு பாரதிய ஞான பீடம் என்கிற கலாசார ஆய்வு நிறுவனம் நிறுவப்பட்டது. அவருக்குப் பிறகும் சாஹூ ஜெயின் குடும்பத்தினர் அந்த அறக்கட்டளையை பல இலக்கிய, சமுதாய மேம்பாட்டு நிகழ்வுகளுக்காக நடத்தி வருகின்றனர். 1961 இல் இந்திய மொழிகளில் வெளிவரும் தலைசிறந்த இலக்கியப் படைப்பையோ அல்லது படைப்பாளர்களையோ கௌரவிக்க முடிவு செய்தது பாரதிய
ஞானபீடம். 1965 முதல் “ஞானபீடம்’ விருது வழங்கப்பட்டு வருகிறது.

அரசின் தலையீடு துளியும் இல்லாமல், ஒவ்வொரு மொழியில் இருந்தும் சிறந்த படைப்புகள், படைப்பாளிகளைப் பரிந்துரைக்க குழுக்கள் அமைக்கப்பட்டு, அந்தப் பரிந்துரைகள் அனைத்தும் தேர்வுக் குழுவினரின் பரிசீலனைக்கு அனுப்பப்படுகிறது. அவற்றிலிருந்து விருதாளர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே தேர்வுக் குழுவில் ஒருவர் உறுப்பினராக இருக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1965  இல் “ஓடக்குழல்’ என்கிற மலையாளக் கவிதை நூலுக்கு ஜி.சங்கர குறுப்பு தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு ஞானபீட விருதாளர்களும் தனித்துவம் மிக்க இலக்கிய ஆளுமையாக இருந்திருக்கிறார்கள். கடந்த 2023 ஆம் ஆண்டுக்கான “ஞானபீடம்’ விருது, பிரபல உருதுக் கவிஞரும், ஹிந்தி திரைப்படப் பாடலாசிரியருமான குல்ஷாருக்கும், சம்ஸ்கிருத விற்பன்னரான ராமபத்ராசார்யாவுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. இருவருமே தங்களது இலக்கியப் படைப்புகளால் அந்த விருதைப் பெறுவதற்குத் தகுதியானவர்கள் மட்டுமல்ல, விருதின் மரியாதையை மேம்படுத்துபவர்களும்கூட.

சுதந்திர இந்தியாவின் தலைசிறந்த கவிஞர்களில் ஒருவர் குல்ஷார் என்பதில் யாருக்குமே மாற்றுக் கருத்து இருக்க முடியாது. உருது என்கிற அழகிய இந்திய மொழியை அவர் கையாளும் விதத்தில் மயங்காதவர்களே இல்லை. ஒன்றுபட்டிருந்த இந்தியாவில், வட இந்திய இலக்கியவாதிகள் ஜாதி, மத வேறுபாடில்லாமல் உருது, சம்ஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளையும் தெரிந்து வைத்திருந்தனர் என்பதை இங்கே குறிப்பிட வேண்டும்.

பிரிவினைக்கு முந்தைய இந்தியாவில், இப்போது பாகிஸ்தானில் சேர்ந்துவிட்ட ஜீலம் மாவட்டம் தினா என்கிற ஊரில் பிறந்தவர் குல்ஸôர். அவர் இஸ்லாமியர் அல்லர். சீக்கியரான அவரது இயற்பெயர் சம்பூரண் சிங் கல்ரா. பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது ரவீந்திரநாத் தாகூரின் கவிதைகளில் மனதைப் பறிகொடுத்து, அதன் நீட்சியாகக் கவிதைப் பித்தரானவர் அவர்.

பள்ளிப் பருவத்திலேயே உருது மொழியில் கவிதை புனையும் ஆற்றல் கைவரப்பெற்ற குல்ஸாரின் குடும்பம், 1947 தேசப் பிரிவினையைத் தொடர்ந்து, சீக்கியர்கள் என்பதால் பாகிஸ்தானிலிருந்து அடித்து விரட்டப்பட்டது. இந்தியா வந்தபிறகு பிழைப்புத் தேடி மும்பை (அன்றைய பம்பாய்) வந்தடைந்தார் அவர். சம்பூரண் சிங் கல்ரா, கவிஞர் குல்ஸாராக மாறினார்.

1963 }இல் பிரபல ஹிந்தி திரைப்பட இயக்குநர் பிமல் ராய் இயக்கிய “பந்தினி’ திரைப்படத்தில் தொடங்கிய அவரது திரைப்பயணம், பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக, இயக்குநராக நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் தொடர்ந்தது. ஹிந்தி திரைப்படங்களின் பிரபல இசையமைப்பாளர்களான எஸ்.டி.பர்மன், ஆர்.டி.பர்மன், சங்கர் ஜெய்கிஷண், லஷ்மிகாந்த்}பியாரேலால், மதன் மோகன், ராஜேஷ் ரோஷன், சலீல் சௌத்ரி, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பலரது இசைக்கு இலக்கிய மெருகூட்டிய பெருமை குல்ஸாரின் பாடல் வரிகளுக்கு உண்டு.

திரையுலகின் தலைசிறந்த விருதான தாதாசாஹேப் பால்கே விருது வழங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இலக்கியத்தின் முதன்மை விருதான “ஞானபீடம்’ குல்ஸாருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. “ஸ்லம் டாக் மில்லினியர்’ திரைப்படத்துக்கான ஆஸ்கார் விருது அவருக்கும் ரஹ்மானுக்கும் இணைந்துதான் வழங்கப்பட்டது என்பது பலருக்கும் தெரியாது. அந்த நிகழ்வுக்கான கருப்புக் கோட்டை அணிய விரும்பாததால், விருதுபெற அவர் போகவில்லை என்பது வெளியில் தெரியாத ரகசியம்.

5 தேசிய திரைப்பட விருது, 22 ஃபிலிம்ஃபேர் விருது என்று 40}க்கும் அதிகமான விருதுகள்; சாகித்திய அகாதெமி, பத்மபூஷண், தாதாசாஹேப் பால்கே உள்ளிட்ட விருதுகள் என்று அவருக்கு வழங்கப்பட்டிருந்தாலும், இப்போது வழங்கப்பட இருக்கும் “ஞானபீடம்’தான் அவரது கிரீடத்தில் இடம்பெறும் “கோஹினூர்’ வைரம்!.

“எல்லோரும் நீந்துவார்கள். நானோ இலக்கியத்தில் மூழ்கிவிட்டேன்’ என்று சொல்லும் கவிஞர் குல்ஸாரின் அபிப்ராயத்தில் கவிதையும், கவித்துவமும் அழியாத சாகா வரம் பெற்றவை. அவர் எழுதியிருக்கும் “மிர்ஸா காலீப்’, பிரிவினை குறித்த “ஃபுட் பிரிண்ட்ஸ் ஆன் ஜீரோ லைன்’ உள்ளிட்ட புத்தகங்கள் பேசப்படுபவை. ஆசியாவின் சிறந்த கவிஞர்களின் படைப்புகளைத் தொகுத்து அவர் வெளிக்கொணர்ந்திருக்கும் “நாளும் ஒரு கவிதையும்’, குழந்தைகளுக்காக அவர் எழுதியிருக்கும் “சமை கா கட்டோலா’வும் காலம் கடந்தும் பேசப்படும் அவரது பங்களிப்புகள்.

கவிஞர்கள் பாராட்டப்படும்போதுதான் அந்த சமூகம் தலைநிமிர்கிறது. வரலாறு அரசர்களால் படைக்கப்படுவதில்லை. கவிஞர்களால்தான் பதிவு செய்யப்படுகிறது..


Watch – YouTube Click

What do you think?

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் மாபெரும் காத்திருப்பு மற்றும் முற்றுகைப் போராட்டம்

BJP மம்தா உருவ பொம்மை எரிக்க முயற்சி