கஞ்சா பயன்படுத்தினால் 6 மாதத்தில் உயிரிழப்பு உறுதி? – காவல் ஆய்வாளர் எச்சரிக்கை வீடியோ வைரல்
மூளையின் தீர்மானிக்கும் திறன் பாதிக்கப்படுவதால் விபத்துகள் ஏற்படுவதாக போதை விழிப்புணர்வு கூட்டத்தில் பேச்சு
காரைக்கால்: பீடி, சிகரெட், மதுபானம் உள்ளிட்ட போதைப் பழக்கங்களைத் தொடர்ந்து, தற்போது இளைஞர்கள் பலர் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு அடிமையாகி வருவதாக கவலை தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், காரைக்காலில் நடைபெற்ற போதைப்பொருள் விழிப்புணர்வு கூட்டத்தில் திருநள்ளாறு காவல் ஆய்வாளர் பிரவீன்குமார் பேசிய எச்சரிக்கை வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கஞ்சா பயன்படுத்துவதால் மூளையின் தீர்மானிக்கும் திறன் பாதிக்கப்படுவதாகவும், குறிப்பாக வாகனம் ஓட்டும்போது எதிரே வரும் வாகனம் நகர்கிறதா அல்லது நிற்கிறதா என்பதை சரியாகக் கணிக்க முடியாமல் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் காவல் ஆய்வாளர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், கஞ்சாவுக்கு அடிமையானவர்களில் பலர் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழப்பதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
“3 முதல் 6 மாதங்களுக்குள் மூளையின் தீர்மானிக்கும் சக்தி பாதிக்கப்படலாம். இதனால் வாகனம் ஓட்டும்போது எதிரே இருக்கும் பெரிய வாகனம் செல்கிறதா அல்லது நிற்கிறதா என்பதை தீர்மானிக்க முடியாமல், நிற்கும் வாகனத்தின் மீது மோதி விபத்தில் சிக்குகின்றனர்” என அவர் விழிப்புணர்வு கூட்டத்தில் பேசியதாக கூறப்படுகிறது.
கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், போதைப்பொருட்களிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் காவல் ஆய்வாளர் அறிவுறுத்தினார்.
காரைக்காலில் நடைபெற்ற இந்த போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர் பிரவீன்குமார் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வேகமாகப் பரவி வருகிறது.


