காவேரிப்பட்டினம் அருகே முனியப்பன் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
300 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோவிலில் விமரிசையாக நடைபெற்ற கும்பாபிஷேகம் – ஏராளமான பக்தர்கள் தரிசனம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அருகே செட்டிமாரன்பட்டி பகுதியில் ஜான்செருகு மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற முனியப்பன் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
செட்டிமாரன்பட்டி மற்றும் தோட்டிப்பாறை கிராம மக்கள் ஒன்றிணைந்து, பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கோவில் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். இதன் ஒரு பகுதியாக சுமார் 21 அடி உயரத்தில் காவல் தெய்வங்களான முனியப்பன் மற்றும் முனியம்மாள் ஆகியோரின் திருவுருவச் சிலைகள் புதிதாக அமைக்கப்பட்டன. தொடர்ந்து நவகிரக பிரதிஷ்டையுடன் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
கும்பாபிஷேக விழா நேற்று மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. யாகசாலையில் புனித நீர் அடங்கிய கலசங்கள் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்வான இன்று காலை முதல் மற்றும் இரண்டாம் கால பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, யாகசாலை வேள்வியில் அக்னி பகவானுக்கு பூர்ணாஹுதி சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர் புனித நீர் அடங்கிய கலசங்கள் கோபுரம் மற்றும் மண்டபத்தின் மீது எடுத்துச் செல்லப்பட்டன.
இதையடுத்து முனியப்பன் மற்றும் முனியம்மாள் சன்னதிகளின் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவர்களுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன.
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த முனியப்பன் மற்றும் முனியம்மாளை கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வழிபட்டனர்.
மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பு அன்னதானமும் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை செட்டிமாரன்பட்டி மற்றும் தோட்டிப்பாறை கிராமங்களைச் சேர்ந்த ஊர் கவுண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.
மேலும், கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டல பூஜைகள் நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

