நாகையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை
நாகப்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்றிரவு திடீரென இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. கடந்த சில நாட்களாக அப்பகுதியில் வெயிலின் தாக்கம் பொதுமக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில், நேற்றிரவு திடீரென வானில் கருமேகங்கள் திரண்டு பலத்த காற்றுடன் கனமழை பெய்யத் தொடங்கியது.
குறிப்பாக நாகை நகர் பகுதி, வெளிப்பாளையம், புத்தூர், பால்பண்ணைச்சேரி, காடம்பாடி, சிக்கல், நாகூர், திருமருகல், திட்டச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் இடைவிடாது விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கியது.
இந்தத் திடீர் மழையால் நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர் வெக்கையால் அவதிப்பட்டு வந்த மக்கள், வெப்பம் தணிந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த சூழல் நிலவுவதால் பெரும் நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர். மேலும், இந்த மழை நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த உதவும் என்பதால் அப்பகுதி விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


