மூதாட்டியை கவனிக்காத மகன்கள் – ஆட்சியரிடம் மனு!
மூத்த மகன்கள் கவனிக்கவில்லை என மூதாட்டி புகார்; ஜீவனாம்சம், மருத்துவ செலவு பெற்றுத்தர ஆட்சியரிடம் மனு:
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா வடக்குக்காடு பகுதியைச் சேர்ந்தவர் மூதாட்டி சரோஜா.
இவரது கணவர் கடந்த 1996ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில், மூன்று மகன்களுடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 2000ஆம் ஆண்டு முதல் இளைய மகன் இளையராஜாவுடன் வசித்து வருவதாகவும், தனக்கு தேவையான உணவு, உடை மற்றும் மருத்துவ செலவுகளை இளைய மகனே கவனித்து வருவதாகவும் சரோஜா தெரிவித்துள்ளார்.
ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை, மனநல சிகிச்சை, கால் எலும்பு முறிவு உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சிகிச்சைகளுக்காக சுமார் 10 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது மூத்த மகன்களான சிங்காரவேல் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் சொத்துகளில் தங்களுக்கான பங்குகளை பெற்றுக்கொண்ட பின்னரும், தன்னை கவனிக்கவில்லை என்றும், மருத்துவ செலவுகளுக்கு உதவவில்லை என்றும் சரோஜா குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக கடந்த 2024ஆம் ஆண்டு முதல் மாவட்ட ஆட்சியர், உள்ளிட்ட அதிகாரிகளிடம் தொடர்ந்து மனு அளித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, கடந்த 2025ஆம் ஆண்டு கோட்டாட்சியர் உத்தரவின்படி, மூன்று மகன்களும் தலா 3 ஆயிரம் ரூபாய் வீதம் ஒவ்வொரு மாதமும் 3ஆம் தேதிக்குள் தனது வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

ஆனால், மூத்த மகன்களான சிங்காரவேல் மற்றும் செந்தில்குமார் இதுவரை எந்த தொகையையும் வழங்கவில்லை என்றும், இளைய மகன் இளையராஜா மட்டுமே தன்னுடன் வசித்து வருவதுடன், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் ஏற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால், மூத்த மகன்களிடமிருந்து ஜீவனாம்சம் மற்றும் மருத்துவ செலவுக்கான தொகையை பெற்றுத்தர வேண்டும் என்றும், இளைய மகனுக்கு கிடைக்க வேண்டிய பங்கீடு செய்யப்படாத சொத்துகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் சரோஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், தனது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், தனது கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், மகன் சம்மதத்துடன் கருணைக்கொலைக்கு அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

