திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் ஆடி பூர பிரம்மோற்சவம் விழா
ஆடி பூர பிரம்மோற்சவம் விழா உண்ணாமுலை அம்மன் சன்னதி எதிரே உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது….. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்…..

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா மிகவும் பிரசித்தி பெற்றது.
அதன்படி இந்தாண்டுக்கான ஆடி பிரம்மோற்சவ விழா இன்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூரம் நட்சத்திரத்தில் அண்ணாமலையார் கோவிலில் உள்ள உண்ணாமுலையம்மன் சன்னதி எதிரே அமைந்துள்ள தங்க கொடிமரத்தில் கடக லக்னத்தில் சிவாச்சாரர்கள் வேத மந்திரம் முழங்க கொடியேற்றும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

அப்போது சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் பராசக்தி அம்மன், எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். மேலும் காலை மற்றும் இரவிலும் விநாயகர் மற்றும் பராசக்தி அம்மன் 10 நாட்கள் மாடவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள்.
குறிப்பாக வரும் 14ம் தேதி பத்தாம் நாளில் பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்வும் அன்று நள்ளிரவு உண்ணாமுலை அம்மன் சன்னதி எதிரே தீ மிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து தீ மிதித்து தங்களது நேர்த்திகடனை செலுத்துவார்கள்.


