இயந்திரம் ஒப்படைக்கும் போராட்டம்
நியாய விலை கடையில் பயன்படுத்தப்படும் விரல் ரேகை பதிவு இயந்திரங்களை வட்ட வழங்கல் அலுவலரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நியாய விலை கடை பணியாளர்கள்…..

தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நியாய விலை கடை ஊழியர்கள் நியாய விலை கடையில் பயன்படுத்தப்படும் விரல் ரேகை பதிவு இயந்திரத்தை வட்ட வழங்கல் அலுவலரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,627 நியாய விலை கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த நியாய விலை கடைகளில் அரிசி, பருப்பு, கோதுமை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்க கை ரேகை இயந்திரம் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த இயந்திரங்கள் இணையதள சர்வர் கோளாறு காரணமாக முறையாக வேலை செய்யவில்லை என்று நியாய விலை கடை ஊழியர்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளித்தனர்.
குறிப்பாக இந்த இயந்திரம் வேலை செய்யாததால் பொருட்கள் வழங்குவதில் பொதுமக்களுக்கும் நியாய விலை கடை ஊழியர்களுக்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் நியாய விலை கடை இயந்திரத்தை சரி செய்யாமல் உள்ள மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து நியாய விலை கடை ஊழியர்கள் நியாய விலை கடையில் பயன்படுத்தப்படும் விரல் ரேகை பதிவு இயந்திரத்தை வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஒப்படைத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
மேலும் நியாய விலை கடையில் பயன்படுத்தும் இயந்திரத்திற்கு முறையான இணையதளம் வழங்கி சர்வர் கோளாறை சரி செய்தால் மட்டுமே தங்களால் பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்கி பணியாற்ற முடியும் எனவும், உடனடியாக இந்த இயந்திரத்தை முறைப்படுத்தி தரவேண்டும் என்று தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,627 நியாய விலை கடைகளில் 1,500 கடைகள் திறக்காமல் மாவட்டம் முழுவதும் நியாய விலை கடை ஊழியர்கள் இயந்திரம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

